ஜெயலலிதா மரணம் குறித்து பா.ஜ.க. அறிக்கை வெளியிடுமா? Featured

ஜெ. ஜெயலலிதா என்ற தனித்த பெண் ஆளுமையின் மரணத்திற்குப் பின்னால் மறைக்கப்பட்ட மிகப் பெரும் மர்மம் உள்ளது என சாதாரணப் பொதுமக்களுக்கே சந்தேகம் எழும்போது, மத்தியில் ஆளும் பாஜகவிலிருந்து தமிழகத்தின் எதிர்க்கட்சி திமுக வரை அதில் எந்தக் கேள்வியுமே கேட்காமல் மவுனம் கடை பிடிப்பதன் மர்மம் என்ன?

தம்மை ஆட்சி செய்த முதல்வரின் மரணம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இல்லையா?

இதன் பின்னணியிலுள்ள கூட்டுக் களவாணித்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள மிக எளிய வழியொன்று உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்புப் படையின் உயர்தர பாதுகாப்பு அரண் வழங்கப்பட்டிருந்தவர்தான் செல்வி ஜெயலலிதா. தினசரி அவர் பாதுகாப்பு குறித்த விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவிக்கப்படும்.

எனில், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அவர் குறித்த விவரங்கள் தினசரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கைகளில் கிடைத்திருக்க வேண்டும். அதனைப் பாஜக தம் லாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும்.

ஜெ.யின் மரணத்திற்குப் பின்னால் எது நடந்திருந்தாலும் அது மத்திய பாஜக அறியாமல் நடக்க வாய்ப்பேயில்லை. ஆக, நடந்தவை அனைத்தும் பாஜகவின் ஒப்புதலோடு அதன் கண்ணசைவில் நடைபெற்றுள்ளன.

ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பாஜகவினர் தமிழக அரசியலில் நடத்தும் கேவலமான விளையாட்டுகளும் அவர்கள் என்ன செய்தாலும் பாஜகவுக்கு எதிராக ஒரு சுண்டுவிரலைக் கூட அசைக்க திராணியற்று, சசி-திமுக-பன்னீர் என முக்கோண குற்றப்படுத்தல்கள் மட்டுமே சசியும் பன்னீரும் செய்துகொண்டிருப்பதும் பாஜகவின் பிடியில் சசி&பன்னீர் சிக்கியுள்ளனர் என்பதற்கான அடையாளங்கள்!

எனவே,

பன்னீர்செல்வம் ஜெ மற்றும் அதிமுக மீதான தம் விசுவாசத்தை நிரூபிக்க, மீதமுள்ள 90 சதவீத உண்மைகளை வெளிவிட வேண்டும். இதன் மூலம், பாஜகவுக்கு விலை போனவர் என்ற அவப்பெயர் களைவதோடு மக்கள் முன்னிலையில் தலைவனாக தலை நிமிர்ந்து நிற்கலாம்.

வலுவான எதிர்க்கட்சி என்ற வகையில் இப்போதாவது, ஜெ. மரணம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கைகளிலுள்ள விவரங்களை வெளியிட திமுக, பாஜகவை நிர்பந்திக்க வேண்டும். அது நடக்கும் என்ற நம்பிக்கையில்லை.

வெள்ளை அறிக்கை கோரலை அதிமுக தொண்டர்களுடன் இணைந்து மக்கள் எழுப்பத் தொடங்க வேண்டும்!

பாஜக, சசி, பன்னீர் என முகமூடி அரக்கர்களின் முகங்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டு விடலாகாது!

-ABDUL RAHMAN 

Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 08 February 2017 20:07