ஹோலி பண்டிகை: கலர் சாயங்களுடன் கலந்திருக்கும் காம சாயங்கள்! Featured

வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை அதாவது வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல், தீபாவளி, ஓணம், யுகாதி என பல்வேறு பண்டிகைகள் உற்றார் உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடப்பட்டு வந்தாலும், ஹோலி பண்டிகை என்பது இந்த பண்டிகைகளிலிருந்து சற்று மாறுபட்டு காணப்படுகிறது. வட இந்தியாவில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தும் பண்டிகை ஹோலி ஆகும்.

வெள்ளை நிற ஆடைகளை அணிந்துகொண்டு, பல்வேறு வண்ணங்கள் நிறைந்த பொடிகள் மற்றும் வண்ண சாயங்களை ஒருவர் மீது தெளித்து அன்பினை பரிமாறிக்கொள்வார்கள். மேலும், வீடுகளிலும் பல்வேறு வகையான உணவுகளை சமைத்து உற்றார் உறவினர்களோடு சேர்ந்து உண்டு மகிழ்வார்கள்.

கலாசாரத்தின் பிறப்பிடமாக திகழும் இந்தியாவில் கலர் சாயங்களை முகங்களிலும், உடல்களிலும் ஒருவர் மீது ஒருவர் தடவும்போது, அது உறவினர்கள் என்றால் அந்த இடத்தில் குதூகலம் மட்டும் நிரம்பியிருக்கும்.

ஆனால், இதுவே வீதிகளில் இறங்கி ஆண் பெண் பேதமின்றி சாயங்களை உடல்களில் தடவிக்கொள்ளும்போது அங்கு சிறு சிறு சங்கடங்களே நிகழும். சாயங்களை பூசுபவர், பூசிக்கொள்பவர்கள் ஆகிய இருவரது மனதிலும் எவ்வித சஞ்சலங்களும் எழாத வரைக்கும் அங்கு அன்பு, சந்தோஷம் ஆகிய இரண்டுமே நிலைத்திருக்குமே தவிர தவறான வேறு ஒரு உறவு அங்கு வந்துவிடாது.

வீதிகளில் இந்த பண்டிகைளை கொண்டாடும்போது, நம் மீது கலர் சாயங்களை பூசுபவர்களை தடுக்க இயலாது. அன்பாக ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொள்ளும் இந்த கலர் சாயங்களுக்குள் சில காம சாயங்களும் மறைந்திருக்கின்றன. இதனை கண்டுகொண்டு ஒதுங்கிவிடுபவர்கள் சிலர், கண்டுகொள்ளாமல் களத்தில் இறங்கி கொண்டாடுபவர் பலர்.

இந்த பண்டிகையை விபரீதமான எண்ணம் கொண்ட ஆண்களும் வேறு சில காரணங்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றர். கலர் சாயங்களை பூசுகிறோம் என்ற பெயரில், பெண்களின் அங்கங்களை துளைத்தெடுக்கிறார்கள். கும்பலமாக ஒன்று சேர்ந்து, வீதிகளில் பெண்கள் கூட்டம் தென்பட்டால் போதும் அதற்குள் புகுந்த தங்கள் சேட்டைகளை நிகழ்த்திவிடுகின்றனர்.

சந்தோஷமாக கொண்டாடப்பட வேண்டிய பண்டிகையை சாக்கடையாக மாற்றி, இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சொல்லப்போனால், இந்த ஹோலி பண்டிகை சில நேரங்களில் பலாத்கார பண்டிகையாகவும் மாறிவிடுகிறது.

இதுபோன்ற சம்பவங்களால் பல்வேறு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் அந்த இடத்திலேயே இதுபோன்ற வெறியர்களுக்கு தண்டனை வழங்கிவிடுகின்றனர்.

இதுபோன்ற, சம்பவங்கள் குறித்து புகார் அளித்தாலும் பண்டிகை என்று வந்தால் கேளிக்கூத்துகள் நடக்கத்தான் செய்யும், என்று சப்பை கட்டிவிடுவதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

Rate this item
(0 votes)
Last modified on Friday, 17 March 2017 11:14