கல்வியில் நசுக்கப்பட்ட முஸ்லிம்கள் - அதிர்ச்சிதரும் உண்மைகள்! Featured

Sunday, 23 July 2017 13:09 Published in சமூக வலைதளம்

முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறிவிடக்கூடாது என்பதை அப்போதிலிருந்தே அதிகாரத்தில் இருந்தவர்கள் கவனமாகவே இருந்துள்ளனர்.

ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக ஆங்கிலேயரின் மெக்காலே வழிக் கல்வியைப் புறக்கணித்த முஸ்லிம் சமுதாயம், அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் பின் தங்கி இருப்பதை உணர்ந்து, ஆங்கில வழிக் கல்வியை முஸ்லிம்களும் கற்க பல்வேறு முயற்சிகளை 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே தொடங்கிவிட்டது. ஆனாலும் முஸ்லிம்கள் கல்வி கற்பதை (குறைந்தபட்சம் அரசு செலவில் முஸ்லிம்கள் கல்வி கற்பதை) அரசுகள் விரும்பவில்லையோ என்ற ரீதியிலேயே விடுதலைக்குப் பின்னரான சென்னை மாகாண அரசு நடந்து கொண்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் ஆற்காடு நவாப் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட இடத்தில் மதரசாயே ஆஜம் பள்ளியும் அதனைத் தொடர்ந்து அதே இடத்தில் 1901ஆம் ஆண்டு அரசு முஹமதிய கல்லூரியும் தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் 25% முஸ்லிம் அல்லாதோருக்கும் ஒதுக்கப்பட்டது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்கு இணையாக முஸ்லிம்களால் கருதப்பட்டிருந்த அந்தக் கல்லூரியை செக்யூலரிசத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி அப்போதைய கல்வி அமைச்சர் மாதவ மேனன் "அரசு கலைக்கல்லூரி" என்று பெயர் மாற்றியதுடன் முஸ்லிம்கள் அனுபவித்து வந்த 75% ஒதுக்கீட்டையும் ரத்து செய்தார்.

அந்தக் கல்லூரி வளாகத்திலேயே அமைந்திருந்த "அரசு முஸ்லிம் பெண்கள் கல்லூரி" இழுத்து மூடப்பட்டது. முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற பெண் உறுப்பினரான பேகம் மீர் அமீருத்தீன் அரசின் முடிவை எதிர்த்து சட்டமன்றத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்தார். அதனால் எந்தப் பலனும் இருக்கவில்லை.

அரசின் நடவடிக்கையால் அப்போதைய முஸ்லிம் தலைவர்களும் கல்வியாளர்களும் சோர்ந்துவிடவில்லை. தாங்களே சுயமாக நிதி திரட்டி ஆண்களுக்கு ஒன்றும் பெண்களுக்கு ஒன்றுமாக இரண்டு கல்லூரிகளை நிறுவினார்கள். அந்தக் கல்லூரிகளின் பெயர்களில் "முகமதிய" அல்லது "முஸ்லிம்" போன்றவை இடம்பெறாமல் பார்த்துக் கொண்டார்கள்.

1951ஆம் ஆண்டு ராயப்பேட்டையில் புதுக் கல்லூரியும் 1955ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் எஸ்ஐஈடி (தற்போது ஜஸ்டிஸ் பஷீர் அஹமது செய்யது பெண்கள் கல்லூரி)யும்தான் அந்த இரண்டு கல்லூரிகள்.

இனியும் அரசை நம்பிக் கொண்டிருந்தால் புதிய சமுதாயம் கல்வியற்றதாக மேலும் பின் தங்கிவிடும் என்பதை உணர்ந்த தலைவர்கள், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, அப்போதைய செல்வந்தர்களிடம் பேசி 11 புதிய கல்லூரிகளை உருவாக்கினார்கள்.

1974ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது மதரசயே ஆஜம் பள்ளி வளாகத்தில் இருந்த அரசு கலைக் கல்லூரியை நந்தனத்துக்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் "காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி"யை கலைஞர் அரசு ஏற்படுத்தியது.

நன்றி: அப்துல் கறீம்

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.