நான் மரணிக்கும் முன் அவர் மரணிக்க வேண்டும் - ஒரு தம்பதியின் உண்மை கதை! Featured

Saturday, 16 September 2017 09:15 Published in சமூக வலைதளம்

நான் ரங்கா பாவு. அப்படித்தான் என் கணவர் என்னை அழைப்பார் அப்படியென்றால் அழகான மனைவி என்று அர்த்தமாம்.

எனக்கு 12 வயதாக இருந்தபோது எனக்கு திருமணம் நடந்தது. அவர் குதிரை வண்டியில்தான் என்னை மணம் முடிக்க வந்தார். என் கிராமத்தில் யாரும் குதிரை வண்டியில் வந்தது கிடையாது. எனக்கு பெருமையாக இருந்தது. எனக்கு 10 டாக்காவை பரிசாக தந்தார். அப்போது அந்த பணத்தில் பல வயல் நிலங்களை வாங்கியிருக்கலாம்.

என் கணவரின் தோலில் கருமை நிறமாக கல் போன்று அவ்வப்போது தோன்றும் அப்போது அவரை என் கிராமத்தினர் கிண்டலடிப்பார்கள். ஆனால் அதைப் பற்றி அவர் கவலையடைந்ததில்லை. எப்போதும் என்னை மட்டுமே பாராட்டிக் கொண்டு இருப்பார். "நீ எவ்வளவு அழகு?" என்றே அவர் என்னை வர்ணிப்பார்.

கடந்த 75 ஆண்டுகளாக நாங்கள் ஒருமுறை கூட பிரிந்ததில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகன் வீட்டிற்கு நான் சென்றேன் அப்போது என் கணவரை இளைய மகன் வீட்டில் விட்டுவிட்டு சென்றேன். அங்கு அவர் 10 நிமிடத்திற்கொருமுறை, "எங்கே என் ரங்கா பாவு? என்று கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். என் மீது அவ்வளவு அன்பு. என்னை பின்தொடர்ந்தே அவர் வருவார் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் இருப்பார். ஒரு நிமிடம் கூட அவர் கண்ணிலிருந்து நான் மறைந்துவிடக் கூடாது. கொஞ்ச நேரம் நான் பேசாமல் இருந்துவிட்டால் கூட பைத்தியம் பிடித்ததுபோல் இருப்பார். நான் அவரை பார்த்து சிரித்த பின்பே சமாதானமாவார். ன
அதிகாலையில் நாங்கள் இருவரும் ஒன்றாகவே எழுவோம். காலை பிரார்த்தனையையும் ஒன்றாகவே முடிப்போம். என் கையால்தான் அவருக்கு சமைத்து கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர் சாப்பிட மாட்டார்.

நாங்கள் இருவருமே முதியவர்களாக கடைசி கட்டத்தில் இருக்கிறோம். நான் இல்லையென்றால் அவர் பைத்தியமாகிவிடுவார். நான் இறைவனிடம் பிரார்த்திப்பது அவருக்குப் பின் நான் மரணிக்க வேண்டும்.

- முஅஸீருத்தீன் சர்தார் (105) மற்றும் அவரது மனைவி ரங்கா பாவு(87)

-GMB Akash - தமிழில்: ஜாஃபர்

Last modified on Saturday, 16 September 2017 04:35
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.