ஊடக அறம் வேண்டாம்; மனிதத் தன்மை வேண்டாமா? Featured

வெட்டப்பட்ட நிலையில் ரத்தம் கசியும் ஒரு உடலை உங்கள் மனைவி, குழந்தைகளை அழைத்து சென்று அருகில், க்ளோஸ் அப்பில் காண்பிக்க எத்தனை பேர் தயார்?

பன்னாட்டு அளவில் தரமான, அறிவார்ந்த காட்சி ஊடகங்களை பொறுத்தவரை. அதிகாலையில் ஒரு விபத்து நடைபெற்று அதில் 100 பேர் இறந்து போனாலும்கூட முதலில் விபத்து நடைபெற்றுள்ளது என்று செய்தி மட்டும்தான் சொல்வார்கள். மிகவும் பெரிய விபத்து என்றால் விபத்து நடைபெற்ற இடத்தை காண்பிப்பார்கள் அதுவும் லாங் ஷாட்டில் காண்பிப்பார்கள். ஆனால், சடலங்களை காண்பிக்க மாட்டார்கள். அடுத்து காலை சுமார் 11 மணிக்கு விபத்து நடந்த இடத்தில் ரத்தக்கறையை காண்பிப்பார்கள். சுமார் 3 அல்லது நான்கு மணிக்குதான் விபத்து நடைபெற்ற இடத்தின் முழு வீடியோவை காண்பிப்பார்கள். அப்போதும் சடலங்களை காண்பிக்கவே மாட்டார்கள். அவ்வாறு காண்பித்தாலும் கூட முழுவதுமாக பேக் செய்யப்பட்ட உடலைத்தான் காண்பிப்பார்கள். இதற்கு காரணம், அதிகாலையில் மனிதர்களின் மனம் இலகுவாக, புதிதாக இருக்கும். அப்போது கோரமான காட்சிகளை பார்க்கும் போது மனம் மிகுந்த விகாரத்தன்மையை அடையும், அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாதவாறு இருக்கும். உறைந்து செல்லும் நிலைக்கு சென்று விடும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த விபத்து குறித்த செய்தியை முழுவதுமாக மக்கள் மன ரீதியாக சந்திக்கும் வரை பொறுமையாக காட்சிகளை வரிசைப்படுத்துவார்கள். அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்தில் எத்தனை இறந்து போன உடல்களை கோரமான நிலையில் ஊடகங்களிலோ, யூ டியுபிலொ, இணையத்திலோ காண முடிந்தது, இன்று காண முடிகிறது? ஒரு உடல் படம் கூட வெளியாகவில்லை.

கோரமான உடலை காண்பித்துதான் ஒரு செய்தியை மக்களிடம் சொல்ல வேண்டும் என்பது இல்லை. காரணம் உங்கள் ஊடகத்தை பார்த்து கொண்டு இருப்பவர்களில் உங்கள் சிறு வயது குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள், பெண்கள், மன வலிமை குறைந்த எளிதில் அதிர்ச்சியை உள்வாங்கும் பலர் இருக்கிறார்கள். இது சடலத்துக்கு மட்டும் அல்ல, எல்லா தரப்புக்குமே ஒரு சேர சென்று சேரக்கூடாத எல்லா காட்சி மற்றும் செய்திகளுக்கும் பொருந்தும். சாமியார் நித்யானந்தா வீடியோவை காட்சி ஊடகம் அன்று காலை முதல் தொடர்ந்து ஒளிபரப்பி வந்த போது ஒரு தந்தையை பார்த்து 10 வயது பெண் குழந்தை கேட்டது அந்த அங்க்கிளும், ஆண்ட்டியும் என்ன செய்யறாங்க என்று ? குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் காட்சி ஊடகம் பல்வேறு வயது வித்தியாசம் கொண்டவர்களுக்கு என்ன விதமான நீதி நேர்மை கொண்ட செய்திகளை வழங்குகிறது ?

காட்சி ஊடகங்களை தூக்கி சாப்பிட்டு கொண்டு இருக்கின்றன சமூக ஊடகங்கள். வெட்டப்பட்ட ஒரு இளையோரின் உடலை அவ்வளவு க்ளோஸ் அப்பில் புகைப்படமாக வெளியிட்ட வகையில் எவ்வளவு வக்கிரம் கொண்ட மனோ நிலையில் படங்களை வெளியிட்டவர்கள் இருக்கிறோம் என்று சிந்தித்து பார்ப்போம். அந்த படம் எவ்வளவு பேருக்கு அவர்களை அறியாமலே மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று அவர்கள் தரப்பில் நின்று சிந்தியுங்கள்.

எப்படி ஒரு வெட்டப்பட்ட, கோரமான சடலத்தை என் குழந்தைகளை, மனைவியை அழைத்து சென்று மிகவும் பக்கத்தில் அவர்களுக்கு காண்பிக்க மாட்டேனோ அதே போல காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்களிலும் அது போன்ற காட்சி, படங்களை வெளியிட மாட்டேன் என் ஒவ்வொரு தனிமனிதரும், ஊடக செய்தி ஆசிரியர்களும், முதலாளிகளும் முடிவெடுங்கள்.

பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் வேண்டும் என்றால்...முதலில் அந்த காட்சிகளை உங்கள் மனைவி, குழந்தைகளிடம் காண்பித்து அவர்கள் அப்ரூவ் செய்தால் அதை பொது வெளியில் வெளியிடுங்கள்.

நீங்கள் மனிதரும் கூட என்பதை மறக்க வேண்டாம்.

விஷ்வா விஸ்வநாத்

Rate this item
(0 votes)