பிரிவினையின் வலி மிகுந்த இரயில் பயணம்!

Share this News:

ந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் மறைந்த குஷ்வந்த சிங்-ன் புகழ் பெற்ற நூலான Train To Pakistan-ஐ படித்த போது அவர் ஏன் அவ்வாறு கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. வரலாற்றை வெறுமனே தரவுகளோடும் தகவல்களோடும் சொல்வது ஒரு வகை எனில் அதை இன்னும் ஆழமாக மனிதர்களின் பார்வையில் சமூகவியல் கண்ணோட்டத்துடன் சொல்லும் போது, அது வெற்று வரலாறாக இல்லாமல் நம்மைத் தனிப்பட்ட முறையில் வரலாற்றோடு இணைத்துவிடுவதாக ஆகிவிடுகிறது. அந்த ரசவாதத்தைத் தான் குஷ்வந்த் சிங்கின் இந்நூல் செய்திருக்கின்றது.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் கற்பனையாக உருவகம் செய்யப்பட்ட மனோ மஜ்ரா எனும் கிராமத்தின் பார்வையில் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை உணர்வுபூர்வமாக புத்தகம் பேசுகிறது. ஒப்பீட்டளவில் சிறிய நூலான இதனை நிறைய கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளதோடு, பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்களுக்கு முஸ்லீம்கள், ஹிந்துக்கள் என இரு சாராருமே காரணம் என இப்புதினத்தில் அவர் குற்றம் சுமத்துகிறார்.

இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனோ மஜ்ரா எனும் கிராமத்தில் மட்டும் சீக்கியர்களும் முஸ்லீம்களும் இரண்டற கலந்து வாழ்கின்றனர். ஆனால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சீக்கியர்களை வெறுக்கும் முஸ்லீம்களும் முஸ்லீம்களை வெறுக்கும் சீக்கியர்களுமாக வாழும் அவல நிலை உள்ளது. பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குச் செல்ல மனோ மஜ்ரா கிராம முஸ்லீம்கள் நிர்ப்பந்திக்கப்படும் போது தங்களுக்குத் தொடர்பில்லாத நிலத்துக்குப் போக மறுப்பதையும் அவர்களை அனுப்ப சீக்கியர்களும் மறுப்பதையும் அழகுற படம் பிடித்து காட்டுகிறார்.

ஆனால் அதே கிராமத்தினர் நீதமற்ற அரசு அதிகாரிகளால் மடை மாற்றப்படுவதையும், வெளியிலிருந்து வந்த அகதிகளால் அங்குள்ள சீக்கியர்கள் உணர்ச்சியூட்டப்பட்டு முஸ்லீம்களைக் கொல்ல முயற்சி செய்வதும் இன்றைய சூழலை ஒத்ததாக இருக்கிறது. மேலும், சுதந்திரம் என்பது படித்தவர்களுக்குத் தான், படிக்காதவர்களான தங்களுக்கு ஆங்கிலேயர்களுக்குப் பதில் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானிய மேட்டுகுடி மக்கள்தான் எஜமானர்கள் எனும் அளவே சுதந்திரம் பற்றிய பிரக்ஞையில் சாமான்யர்கள் இருப்பதைப் புத்தகம் படம் பிடித்து காட்டுகிறது.

ஹுக்கும் சிங்கின் கதாபாத்திரம் மூலம் ஊழல் படிந்த அரசு துறையையும், மத வெறியூட்டப்பட்ட காவல்துறையினரையும் இக்பால் சிங் மூலம் சித்தாந்த ரீதியாக கிராமத்தினரை அறிவுமயப்படுத்த முயலும் அன்றைய அர்பன் நக்ஸல்களையும் ஜுக்குத் சிங், மல்லி மூலமாக ரெளடிகள் என சமூகத்தின் அத்தனை கதாபாத்திரங்களையும் குஷ்வந்த் சிங் இப்புதினத்தில் உலாவ விட்டிருக்கிறார். பாகிஸ்தானுக்குச் செல்லப் போகும் இரயிலில் பயணிக்க போகும் பயணிகளில் நேற்று வரை தம்மோடு நெருங்கி பழகிய அண்டை வீட்டார்களும் உள்ளனர் என தெரிந்ததும் அந்த இரயிலைக் கவிழ்க்கவும் அனைவரையும் எரிக்கவும் திட்டமிடும் அளவுக்கு அவர்களை மாற்றும் மதவெறியைப் படிக்கும் போது குஜராத் கலவரங்களும் கோவை கலவரங்களும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

இல்லஸ்ட்ரேடட் வீக்லி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ்களின் முன்னாள் ஆசிரியரும், தன் 95வது வயதிலும் கூட புத்தகம் எழுதி 2014ல் தன் 99 ஆவது வயதில் மரணித்த குஷ்வந்த் சிங்கின் மாஸ்டர் பீஸ் என தாராளமாக இந்தப் புத்தகத்தை சொல்லலாம். ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கையை எதிர்த்து தனக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதைத் திருப்பியளித்த குஷ்வந்த் சிங் பிரிவினையின் துயரங்களை வலி மிகுந்த தருணங்களைக் கதைப்பாங்கில் இப்புதினத்தில் அழகுற கடத்துகிறார். எல்லா வலிகளுக்குப் பின்னும் அழகான முடிவை போல், அதே மாஜிஸ்டிரேட் ஹுகும் சிங் மூலமாக விடுவிக்கப்படும் ரவுடி ஜுக்குத் சிங் மூலம் அந்த ரயில் சதிகாரர்களின் வலையில் சிக்காமல் நம்மை நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறார் குஷ்வந்த சிங். ஆனால் நடப்பில் தான் அவ்வாறு எல்லா நேரமும் நடப்பதில்லை.

Book Name :Train To Pakistan

Author – Khuswant Singh

Publisher – Penguin Books

Pages – 190 pages

பொறியாளர் ஃபெரோஸ்கான்.


Share this News:

Leave a Reply