விளம்பும் அறமோ விளம்பரம்!

ஏப்ரல் 09, 2018 2410

டந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தொலைக்காட்சியில் ‘அன்பே அன்பே’ என்று சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஓடி வரும் விளம்பரத்தின் போது பாய்ந்து சென்று ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றியதுண்டென்றால் மேலே தொடரவும். இல்லை, அந்த விளம்பரத்தை ரசித்துப் பார்த்த நபர் நீங்கள் என்றால் நமக்குள்ளே கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி இல்லை என்று அர்த்தம்.

தயவு செய்து நீங்கள் வேறு கட்டுரை வாசிக்கப் போய் விடலாம். இந்த விளம்பரம் தொலைக்காட்சியில் வரும் போதெல்லாம் நான் “அன்பே அன்பே… கொல்லாதே” என்று கூச்சலிட்டபடி ரிமோட்டை நோக்கி ஓடிச் செல்வதும் விளம்பரத்தில் அவர் ஹன்ஷிகாவை நோக்கி ஓடி வருவதுமாக வீட்டுக்குள் ஏதோ ஓட்டப் பந்தயம் நடப்பது போல் இருக்கும். பொதுவாக என்னுடைய இலக்கு அவர் ஹன்ஷிகாவை சென்று அடைவதற்குள் சேனலை மாற்றிவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும். பெரும்பாலான சமயங்களில் இதில் நான் தான் படு தோல்வி அடைவேன். மற்ற சமயங்களில் வெற்றிகரமாகச் சேனலை மாற்றி விடுவேன். ஆனால் மாற்றிய சேனலிலும் துரதிர்ஷ்டவசமாக அதே விளம்பரம் தான் ஓடிக் கொண்டிருக்கும்.

மாற்றப்பட்ட சானலில் அவர் வெற்றிகரமாக ஹன்ஷிகாவிடம் வந்து சேர்ந்திருப்பார் அல்லது பாட்டு பாடி முடித்திருப்பார். இந்த விளம்பரம் நிஜமாகவே ஏதேனும் வியாபார யுக்தியா அல்லது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் திரையில் நாயகனாகத் தோன்ற விரும்பும் ஆசையைத் தீர்த்து வைத்துக் கொள்ளச் செய்யும் முயற்சியா என்பது என் மர மண்டைக்கு இன்னும் எட்டாத ஒரு விஷயம். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. இந்த விளம்பரம் அவருக்கு வியாபாரத்தைப் பெருக்கித் தந்ததா என்பது மிகுந்த ஒரு கேள்விக்குறியே ஆனாலும் இது தினம் தினம் என்னைப் போன்றவர்களுக்குத் தந்தது கொஞ்சம் பொறாமை கலந்த ஒரு கோபம் என்பது தான் உண்மை.

ஒரு காலத்தில் நாமெல்லாம்குடும்பத்துடன் வெகுவாக ரசித்து வந்த விளம்பரங்கள் இன்று ஏனோ தானோவென்று ஒரு கிரியேட்டிவிட்டி இல்லாமலும், தரமற்றும், நேர்மையின்றியும் போனதற்கு என்ன காரணம்.? செங்கல் சைஸில் மொபைல் ஃபோன் இருந்த காலத்தில் சிறிய மொபைல் ஃபோன் ஒன்றை அறிமுகப்படுத்திய எரிக்ஸன் விளம்பரம் ஒன்றில் ஹோட்டல் ரெஸ்டாரண்டில் அமர்ந்தபடி ஒரு பெண் சிறிய மொபைல் ஃபோன் ஒன்றைக் காதில் அணைத்து வைத்துப் பேசிக் கொண்டிருப்பாள். எதிரே தூரத்தில் அமர்ந்திருக்கும் நம் வயதான நாயகர் தன்னிடம் தான் அந்தப் பெண் சைகையில் பேசுகிறாள் என்று எண்ணியபடி மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்.

கடைசியில் அந்தப் பெண் அழைப்பதாக எண்ணி அருகில் வர அவள் காதிலிருந்து மொபைலை எடுத்து விட்டு இவரைப் பார்த்து “ஒன் பிளாக் காஃபி பிளீஸ்” என்பாள். அப்போது தான் தெரியும் அது மொபைல் போன் பேச்சு என்று. அசடு வழியும் அந்த வயதான நாயகர் மட்டுமல்ல, முதன் முறை பார்க்கும் போது நாம் உட்பட அனைவரும் ஏமாந்திருப்போம். அன்றைய காலக் கட்டத்தில் மிகவும் பரவலாக அனைவராலும் பேசப்பட்ட, எதற்கும் அசராத சோ உட்பட வெகுவாகப் பாராட்டிய ஒரு விளம்பரம் இது.

இன்றைக்கு இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர் இளைஞர்களாக இருந்தவர்கள் சினிமா தியேட்டரில் படம் போடுவதற்கு முன் தோன்றும் அந்த லிரில் சோப்பு விளம்பரம் வருவதற்குள் அதைத் தவற விடக்கூடாதென்று தலை தெறிக்க உள்ளே செல்ல அவசரமாக ஓடும் அனுபவத்தை மறந்திருக்க முடியாது. அருவியில் நனைந்த படி லா.. லாலா லா...லாலா லா... லாலா லா...என்று பின் புலத்தில் இசையுடன் தலையைச் சிலுப்பியபடி குளிக்கும் அந்தப் பெண்ணுக்கு லிரில் அழகி என்றே பெயர் வைத்து விட்டார்கள். புகழின் உச்சக்கட்டத்தில் இருந்த அந்தப் பெண்ணுக்கு அந்தக் குறிப்பிட்ட விளம்பரம் எடுப்பதற்காகத் தொடர்ச்சியாக அருவியில் குளிக்க வேண்டியிருந்ததாகவும் அதனால் ஜன்னி வந்து இறந்து விட்டதாகவும் பிற்காலத்தில் புரளி வந்தது. அதற்குப் பிறகு அந்த விளம்பரம் இன்னும் பிரபலமானது மட்டுமல்ல. பெருசுகளும் பெண்களும் கூட உச்சுக் கொட்டியபடி பரிதாபப்பட்டுக் கொண்டே அந்த விளம்பரத்தைப் பார்த்து ரசித்தார்கள்.

இப்போது வரும் விளம்பரங்களைப் பொதுவாக ஐந்து அல்லது ஆறு பிரிவுகளில் அடக்கி விடலாம். ஆடைகள் மற்றும் வேஷ்டி விளம்பரம், நகைக்கடை விளம்பரம், இரும்பு கம்பி விளம்பரம், குழந்தை உணவு மற்றும் பெண்கள் உபயோகிக்கும் வஸ்துக்கள்.. சொச்சமாக மசாலா பொருள்கள், சமையல் எண்ணெய் மற்றும் வாகனங்கள். காலையிலிருந்து மாலை வரை ஒரு மொட்டைத்தலை நகைக்கடை உரிமையாளர் நம்மைக் குடும்ப நண்பராகப் பாவித்துக்கொண்டு “வேற எங்கயும் நகை வாங்கி ஏமாறாதீங்க...என் கிட்டயே வாங்கி ஏமாறுங்க” என்று அடம் பிடிக்கிறார்.

ஒடுங்கலான தேகத்துடன் ஒரு ஓரமாக அமர்ந்து ராட்டைச் சுற்றும் காந்தியைப் பார்த்துப் பழகிய நமக்குத் தொலைக்காட்சிப் பெட்டியின் முழு விஸ்தீரணத்தில் நடு நாயகமாக அமர்ந்து ராட்டைச் சுற்றியபடி வேஷ்டி வாங்கச் சொல்லும் பிரபுவை பார்க்கும் போது நேயர்களுக்கு மிகவும் ரசாபாசமாக இருந்தால் அது நியாயமே. நல்லவனாக வேஷம் போட்டு பின்னர் வில்லத்தனம் காட்டும் வேடங்களில் நடிக்கும் நடிகர் கிட்டி நம்மிடம் அம்மன் டிஎம்டி முறுக்கு கம்பி ரொம்ப நல்ல கம்பி என்று வாங்கச் சொன்னால் நம்ப மனம் மறுக்கிறது. பிரபு காலையில் எம்சிஆர் வேஷ்டி கட்ட சொல்கிறார். மத்தியானம் கல்யாண் ஜ்வல்லர்ஸில் நகை வாங்குவது ரொம்பச் சீப் என்று சிபாரிசு செய்கிறார். ஜெயம் ரவியோ “தோள் தட்டி வா! ஆலயா வேட்டி அணிந்து வா” என்று கட்டாயப்படுத்தி விட்டு அடுத்த விளம்பரத்தில் சூட்டும் கோட்டும் அணிந்து இரும்பு கம்பி விற்க வருகிறார். சேனலை மாற்றினால் அங்கேயும் அதே கதி தான் என்பதால் தெரிந்ததால் எல்லாவற்றையும் நாமும் வேறு வழியில்லாமல் பார்த்துத் தொலைக்கிறோம்.

‘ஹார்பிக் பாத் ரூம் சாலஞ்ச்’ என்று கூவிய படி வீடு வீடாகச் சென்று டாய்லெட் சுத்தம் செய்யும் பழைய நடிகர் அப்பாஸ் எப்போது நம் வீட்டுக்கு வருவார் என்று பலரும் வீடுகளில் அழுக்கான டாய்லெட்டோடு ஆவலோடு இன்னும் காத்திருப்பதாகக் கேள்வி.

வெகு சர்வ சாதாரணமாக அதிர்ச்சி அளிக்கும் பல விளம்பரங்கள் தினமும் நம் வீட்டுத் தொலைக்காட்சி பெட்டியில் நம்மைக் கடந்து செல்கின்றன. "கொஞ்சம் இரு. நான் ஷேவ் செய்துட்டு வரேன்..”“ஏய்! நீ நேற்று தானே ஷேவ் செய்த." இந்தச் சம்பாஷணை இரு வாலிபர்களுக்கிடையில் நடந்ததென்றால் அது ஆச்சரியம் இல்லை. அதுவே தொலைக்காட்சியில் தோன்றினால் கொஞ்சம் கூடுதல் ஆச்சரியம். ஆனால் உண்மையில் விளம்பரத்தில் இந்தச் சம்பாஷணை நடப்பது இரண்டு இளம் யுவதிகளுக்குள்ளே என்பது கொஞ்சம் அல்ல நிறையவே அதிர்ச்சி தரும் விஷயம் தான். இன்னொரு விளம்பரத்தில் ஒரு குட்டிப்பெண் பள்ளி சீருடை அணிந்து வகுப்பறையில் கையில் நாப்கின் வைத்தபடி மற்ற மாணவிகளுடன் சேர்ந்து கூட்டு நடனம் ஆடுகிறாள்.

பல சமயங்களில் சில நல்ல விளம்பரங்கள் ஒரிஜினல் மொழியிலிருந்து தமிழ் மாற்றம் செய்யும் போது மிகவும் மோசமாகி விடுகிறது. “ஏன்னா... இது கொஞ்சமா குடிக்குது” என்று வருகிற பைக் விளம்பரம் உட்பட. “ஒரு காப்பீடு இருக்கணும்” என்ற பாடல் வரும் இன்சூரன்ஸ் விளம்பரத்தில் நம் காதில் விழும் வார்த்தை ‘காப்பி டே இருக்கணும்’ என்பது தான். மொழி மாற்றம் சரிவரச் செய்யத் தவறினால் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி விட முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எத்தனை பேருக்கு காப்பீடு என்றால் தெரியும், இதற்கு இன்சூரன்ஸ் என்றே சொல்லி விட்டுப் போய் விடலாம். சில விளம்பரங்கள் அதில் நடிக்கும் அமெச்சூர் நடிகர்களின் அதீத நடிப்பினால் குட்டி சுவராகி விடுகிறது. உதாரணங்கள் சில.

“பல் கூச்சம் என்று என்னிடம் வரும் மக்கள்.. டாக்டர் பல் ரொம்பவும் கூசுகிறது என்று சொல்கிறார்கள்”. சந்தேகமே இல்லை இது போலி டாக்டர் தான் என்று இந்த விளம்பரம் நம்மை நம்ப வைக்கிறது. பங்கஜ கஸ்தூரி இருமல் மருந்துக்காகப் பலமாக இருமிக் காட்டும் பாட்டி.. அடுத்தது மாருதி கார் சீட் பெல்ட் போட மறந்த அப்பாவிடம் “அப்பா நீங்க சீட் பெல்ட் போடலன்னா எனக்கு ரொம்பப் பயமா இருக்கு”ன்னு விம்மி விம்மி அழுது காட்டும் சிறுவன்.. இப்படியாக இந்த லிஸ்ட் மிகப் பெரியது.

சரி அப்படியென்றால் உனக்கு இதுவரை வந்த எந்த விளம்பரமும் பிடிக்கலையா என்று நக்கலாகக் கேட்பவர்களுக்கு நல்ல விளம்பரத்திற்கான ஒரு சாம்பிள் இதோ. . பஜாஜ் பைக் விளம்பரம்.. பாலைவனப் பிரதேசம்... ஒரு இளம் பெண் நிறையத் தண்ணீர் குடங்களை வைத்தபடி அந்த வழியே செல்லும் வண்டியை விட்டு விட்டுத் திகைத்து நிற்பாள்.

"வண்டிய நான் விட்டுட்டேனே.... என்னா செய்வேன்?"

பைக்கில் வரும் இளைஞர் ஒருவர் லிப்ட் தர முன் வர அவள் முகத்தைச் சுளித்தபடி "ஏய் இந்த ஆளுக்கு இல்ல.. முறுக்கு மீசை"

தயங்கியபடி பானைகளைத் தலையில் சுமந்தபடியே கூச்சத்துடன் பைக்கில் அந்தப் பெண் அமர்வாள். மெதுவாகச் சிரிக்கத் தொடங்கிப் பின்னர்,
"வண்டி ஓடுற ஜோருலே… குலுங்கல் இல்ல இல்ல… இல்ல இல்ல... டோய்… மோட்டார் சைக்கிள் செம்ம தூளு டோய்… குலுங்கல் இல்ல இல்ல டோய்:.

இருவருக்கும் இடையே லேசான ஒரு உரசல் கூட இல்லாமல் தலையில் அடுக்கிய பானைகளுடன் அழகிய சர்க்கஸ் கவிதையாக தொடரும் மோட்டார் சைக்கிள் பயணம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இந்த விளம்பரம் மிகவும் நேர்மையாகவும் கொஞ்சம் கூடக் கவர்ச்சியோ விரசமோ இல்லாமல் எடுக்கப்பட்ட விதம், மேலும் பாடல் எளிமையான தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்டிருப்பது போன்றவை இதன் வெற்றிக்கு ஒரு மிக முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

கடைசியாக இப்போது என் எண்ணமெல்லாம் அடுத்து ஆடித் தள்ளுபடி சீசனில் வரப்போகும் தொலைக்காட்சி விளம்பரத்துக்கு ‘பெஸ்டு பெஸ்டு’ சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் என்ன ஐடியா வைத்திருக்கிறார், நயன்தாராவா அல்லது கீர்த்திச் சுரேஷா என்ற பீதியில் உறைந்திருக்கிறது. பலரும் சமூக வலைத்தளங்களில் இவர் தோன்றும் விளம்பரங்களுக்கு எதிர்மறையான கடும் விமர்சனங்களை வைத்தாலும் இன்னும் சிலர் இதை அவரது தன்னம்பிக்கை சார்ந்த விஷயமாகப் பார்ப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது.

இத்தோடு உங்கள் தொலைக்காட்சி பெட்டியை உடைப்பது அல்லது விற்பது என்ற ஏதாவது ஒரு இறுதி முடிவு எடுக்காதவரை இந்த வகையான விளம்பரங்களில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஓடவோ ஒளியவோ முடியாது. ஏனென்றால் அனைத்து சானல்களும் இத்தகைய விளம்பரங்களை மேலும் மேலும் ஒளிபரப்பத்தான் போகிறது. நீங்களும் வேறு வழியில்லாமல் பார்த்தாகிய வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறீர்கள். ஆனாலும் இதில் உருப்படியான ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் உங்களது பொறுமையுணர்ச்சி கூடவும் படிப்படியாகக் கோப குணம் குறைந்து நீங்கள் ஒரு சாந்த சொரூபியாக மாறவும் வாய்ப்பு நிறையவே உள்ளது என்பது தான்.

- சசி

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...