இந்திய வரலாற்றில் இன்று அற்புதமான நாள்!

November 08, 2017
பகிருங்கள்:

ஒரு ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்களை, நிறுவனங்களை புறந்தள்ளி விட்டு, பிரதமர் இந்தியாவின் சர்வாதிகாரி நானே என்று அறிவித்துக் கொண்டதற்கான அத்தாட்சியான நாள்!

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கியுவில் நிற்பார்கள் என்றார் பிரதமர். எந்த பணக்காரனும், தொழிலதிபரும், பிரபலங்களும் கியுவில் நிற்கவில்லை. நின்றது முழுக்க சாமான்யர்கள். நேர்மையான குடிமக்களை கிரிமினல்களைப் போல நடத்திய ஒரு அதிகார திமிர் பிடித்த அரசின் நினைவு நாள்!

முழுமையாய் மின்சாரம் கூட எல்லோருக்கும் தொடர்ச்சியாக கிடைக்காத நாட்டில் எல்லோரும் டிஜிட்டலுக்கு மாறுங்கள் என்று குறைந்தபட்ச காமன் சென்ஸ் கூட இல்லாத ஒரு அரசாங்கம் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட நாள்!

கேஷ்லஸ் இந்தியா என உதார் விட்டு, சராசரி இந்திய குடிமக்களை நோ கேஷ் இந்தியர்களாக மாற்றிய அவலத்திற்கு வித்திட்ட நாள்!

எந்த டைமன்ஷனில் தாள்கள் அச்சிட்டால் ஏ.டி.எம்களில் வைக்க முடியும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத, ஆனால் தாங்கள் இந்தியாவையே தலைகீழாக புரட்டிப் போடப் போகிறோம் என்கிற மமதையோடு பிரதமர் “இனி 500/1000மும் வெற்று தாள்கள்” என கொக்கரித்த நாள்!

150க்கும் மேற்பட்டவர்கள் அரசாங்க உத்தரவுக்கு கட்டுப்பட்டதால் உயிரிழந்தப் போதும், கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல், இன்னமும் இதற்கு சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஈனத்தனமான அரசாங்கம், தன் ஆணவத்தினை திட்டமென்று அறிவித்த நாள்!

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தினை எடுத்துக் கொண்டு வர துப்பில்லாத ஒரு அரசு, தன் நாட்டு மக்களின் மீதே பொருளாதார வன்முறையை பிரயோகிக்க ஆரம்பித்த முதல் நாள்!

இந்தியா முழுக்க இருக்கும் கிராமவாசிகளின், ஆதிகுடிகளின் உரிமைகளை, அவர்களின் சேமிப்பினை கரியாக்கிய நாள்.

ஒரு புதிய ரூ.500 தாளுக்கும், ரூ. 2000 தாளுக்கும் சாதாரணர்கள் நாயாய் அலையும் போது, கட்டு கட்டாய் ரூ.2000 தாள்களை சேகர் ரெட்டி போன்ற “ஏழைகளுக்கு” கொடுத்து கறுப்புப் பணத்தினை “முழுமையாக ஒழித்த” திட்டத்தின் அற்புதமான ஆரம்ப நாள்!

சமூகத்தின் மீதான வன்முறைகளை social cleansing என்று அழகான வார்த்தைகளால் நிரப்பியது தான் ஹிட்லரின் வெற்றி. நாட்டுக்காக தியாகம் செய்ய மாட்டீர்களா என்று அதே சமூக வன்முறையை செல்லாக்காசு திட்டத்தின் மூலம் திணித்தது தான் மோடியின் சாதனை. இந்த நாள் எதேச்சதிகாரத்தின் முகம் புன்னகைத்த நாள்!

சாமான்யர்கள் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டுமென்று சொல்லி விட்டு, பெரும் பணக்காரர்களுக்கு கட்டு கட்டாய் புதிய தாள்களை அரசாங்கமே மாற்றிக் கொடுத்த Official Money Laundering நாள்!

எந்த கட்டமைப்பையும் உருவாக்காமல், டிஜிட்டலுக்கு மாறுவோம் என்று அயோக்கியத் தனமாக, அப்பாவிகளை சீரழிக்க அரசே வேடங்கள் புனைந்த அராஜகத்தின் முதல் நாள்!

பாகிஸ்தான் தான் இந்திய ரூபாய்களை போலியாய் அடிக்கிறது, அதனால் ஒழிக்கிறோம் என்று கதைப் பேசி விட்டு, அடுத்த ஒரு மாதத்திலேயே புது ரூ.2000 போலி தாள்கள் புழக்கத்தில் வந்து, மத்திய அரசின் முகத்தில் அறைந்த முட்டாள்தனத்தின் முதல் நாள்!

தீவிரவாதத்தினை ஒழிக்கிறேன் பேர்வழி என்று வசனம் பேசி விட்டு அடுத்த சில மாதங்களிலேயே கஷ்மீரில் பெல்லட் குண்டுகளால் பயங்கரவாதிகளை கட்டுப் படுத்துகிறோம் என்று மத்திய அரசு பல்டியடித்ததின் ஆரம்ப் நாள்!

மருந்து கசப்பாக தான் இருக்குமென்று என்று மக்களை ஏமாற்றி, மருந்தை தராமல் விஷத்தை கொடுத்து மக்களை கொல்ல ஆரம்பித்த ஒரு economic genocideன் முதல் நாள்!

உலகிலேயே மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து, முதல் முறையாக சொந்த நாட்டு குடிமக்கள் எல்லோருமே அயோக்கியர்கள், கிரிமினல்கள், பதுக்கல்காரர்கள். அப்படி யோக்கியமென்றால் கியுவில் நின்று கணக்கு காட்டு என்று சொன்ன மகோன்னதமான பிரதமரும், அவருடைய ஜால்ராக்களும் “சமூக வன்முறையை” கூச்சமே இல்லாமல் மக்களை நோக்கி சொன்ன நாள்!

ஒரு வருடத்தில் எந்த வெற்றியும் இல்லாமல், ஆனால் எல்லா தோல்விகளையும், பொருளாதார வீழ்ச்சியையும், சமூக சீரழிவையும், சாமான்யர்களின் சரிவையும் உண்டாக்கியதை தவிர செல்லாக்காசு திட்டம் சாதித்து என்ன? ஒரு தோல்வியை மறைக்க ஒராயிரம் பொய்களையும், போலி புள்ளிவிவரங்களையும், ஊடக அடிமைகளையும் உருவாக்கியது தான் மோடியின் சாதனை. குடிமக்களை கொன்று விட்டு, சுடுகாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தியாகம் செய்யுங்கள் என்று சொன்ன அபத்த திருநாள்!

எந்த நாட்டிலிருந்தும் படிப்பினைக் கற்காமல், எங்களுக்கு எல்லாமே தெரியும், நாங்கள் செய்வதெல்லாம் சரியே என்கிற ஆணவம் அதிகாரத்தோடு இணைந்து சாதாரணர்களை பொருளாதார ரீதியாக கொன்ற கறுப்பு நாள்!

- நரேன்

#EconomicDisasterDay
#EDD811
#பொருளாதாரசீர்குலைவுநாள்

 

தற்போது வாசிக்கப்படுபவை!