பட்டியல்களில் இருந்து நீக்கப்படும் முஸ்லிம் வாக்காளர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

மார்ச் 25, 2018 1895

டெல்லியில் நடந்த சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் பல செயல் திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் பெறப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பெங்களுரில் நடந்த தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரைஷி, கர்நாடக மூத்த அமைச்சர் ரோஷன் பேக், மாநில சிறுபான்மை கமிஷன் மற்றும் வஃக்பு போர்டு தலைவர்கள் மூத்த அரசு அதிகாரிகள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக நாமும் கலந்து கொண்டோம். சச்சார் கமிட்டி அறிக்கையையும், பரிந்துரையையும் அளித்த குழுவைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் அளித்த அறிக்கை அனைவரையும் திகைப்படைய வைத்தது. ஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பட்டியயிலிருந்து நீக்கப்பட்டதற்கான விவரத்தை அவர்கள் கணிணி ஆதாரங்களுடன் அளித்தனர். அவ்வாறே பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்கும் இதர வாக்காளர்களிலும் கணிசமானவர் நீக்கப்பட்டுள்ள தகவலையும் அறிய முடிந்தது.

மூன்று மாதிரி தொகுதிகளில் நீக்கப்பட்டவரின் பட்டியலை விலாசத்துடன் அளித்ததை மாநில அரசு அதிகாரிகளே அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். பெங்களுரு மையத்திலுள்ள அமைச்சர் ரோஷன் பேக் வெற்றி பெற்ற சிவாஜி நகர் தொகுதியில் மட்டும் 8000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தகவல் தெரிவித்ததை அவர் முதலில் மறுத்தாலும் ஒரே நாளில் ஆய்வு செய்து அறிவிப்பதாகக் கூறினார். ஆய்விற்குப் பின் மறுநாளே அத்தகவல் உண்மை என்று அவர் அளித்த பேட்டி ஊடகங்களில் வெளியாயின. இவரின் வீடியோ கிளிப் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியை சரி செய்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மறு பதிவு செய்ய அதிவேகமான செயல் திட்டங்கள் கர்நாடக அரசும், ஆர்வலர்களும் மேற் கொண்டுள்ள நிலையிலும் 3 லட்சம் வாக்காளர்கள் மட்டும் மாநில அளவில் தேர்தலுக்கு முன் பதிவு செய்ய முடியும் என்று அறிய முடிகிறது.

இந்தியா முழுவதும் ஏறக்குறைய 3.5 – 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப் பட்டிருக்கலாம் என்ற தகவலும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏறக்குறைய 10 – 12 இலட்சம் முஸ்லிம் வாக்களார் நீக்கப்பட்டு இருக்கலாம் என்பதை தோராயமாக கணக்கிட்டாலும், மூன்று தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கணிணி மூலம் நீக்கப் பட்டியல் சில நாட்களில் அளிக்க கோரியுள்ளேன்.

பாராளுமன்ற தேர்தல் ஒரு வருடம் இருப்பதால் பா.ஜ.க. அல்லாத அரசியல் கட்சிகள், இசுலாமிய இயக்கங்கள் சமூக அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து இந்த சதியை முறியடிக்க வேண்டும். இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் விரைவில் கூட்டபடும்.

- தாவூத் மியான் கான்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...