வாட்ஸ்அப் வசந்திகளுக்கு!

September 18, 2018

வாட்ஸ்அப்பில் நீங்கள் எதையும் பதியும்/பகிரும்/பரப்பும் முன்பு:

1). பெரும்பாலும் அச்சு ஊடகங்களில் (தினத்தந்தி, தினமலர் மாலைமலர் போன்றவை தவிர்த்து...) தேடிப்பாருங்கள். உண்மையெனில் (உலகளாவிய) அச்சு ஊடகங்கள் எதிலேனும் இடம் பெற்றுவிடும் சாத்தியங்கள் உண்டு.

2). செய்திகளின் தன்மையிலேயே சில விளங்கிவிடும். தொடர் வாசிப்பில் உணரலாம்

3). தர்க்கவியலாக யோசித்துப் பாருங்கள். (முயலுக்கு மூன்று கால் என்பது சொலவடை தான், உண்மையில்லை)

4). நீங்கள் உண்மையான இந்து/ முஸ்லிமாக/ தமிழனாக/ இந்தியனாக இருந்தால் இதைப் பரப்புங்கள் என்று மிரட்டலாகக் கூறும் பதிவை கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். அவை 99.99% பொய்தான்.

5). தேதியின்றி வரும், காணாமல் போனவர்கள் பதிவுகளை விட்டுவிடுங்கள். அவை பெரும்பாலும் வருடங்களுக்குப் பிந்தைய மறு சுழற்சியாய் இருக்கும்.

6). வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஒரு பகிர்வுக்கு பத்து பைசா தருகிறது என்பது போன்ற பதிவுகளைக் கண்டதும் வெட்டி குப்பையில் போட்டுவிடுங்கள்.

7). எழுத்துப் பிழைகளுடன் வரும் செய்திகள் பெருமளவும் 'செய்'யப்பட்ட? தீ-யாகத் தான் இருக்கும், நகர்ந்துவிடுங்கள்.

8). இதனைப் பரப்புவதால் தன்னையல்லாத பிறருக்கு நன்மையா, பதற்றமா என்று பரப்புமுன் சற்று யோசியுங்கள்

9). ஜாதி, மதத்துக்கு ஆதரவு போல வந்து தன்பக்கம் கவலடிக்கும் (Same side Goal) பதிவுகளில் எச்சரிக்கையாயிருங்கள்.

10). செய்திக்கடல்கள் பல நம்மைச் சூழ்ந்திருக்கின்றன(ர்). எப்படியும் இச்செய்தி வந்துவிடும் என்பதை உணர்ந்து, பரபரக்கும் விரல்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். இன்னாருக்கு இதனைத் தெரிவித்தே ஆக வேண்டுமென்று நினைத்தால் அவருக்கு மட்டும் அனுப்பி வையுங்கள்.

நல்ல இணைய செய்தி உலவலுக்கும் உசாவலுக்கும் வாழ்த்துகள்.


- இ.ஹ

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, 14 வருடங்கள் கழித்து வைரமுத்துவை சாடுவது?
  • Votes: 0%
  • Votes: 0%
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!