ஆட்டோகிராஃப் ஆபத்து!

ஜனவரி 20, 2019 947

கல்வி இறுதி ஆண்டு முடிந்து ஆட்டோகிராஃப் போடுபவர்கள் கொஞம் கவனத்தில் கொள்ள வேண்டி நகைச்சுவையுடன் கூடிய பதிவு ஒன்றை பேராசிரியர் ஹாஜா கனி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

21ஆண்டுகள் கழித்து இணையும்போது பேச எத்தனை கதை இருக்கும்... பேசிக்கொண்டிருந்தோம்.

பட்டுக்கோட்டையில் தொழிலதிபராக இருக்கும் அந்த நண்பர், “நீ போட்ட ஆட்டோகிராஃபால் இன்னும் வீட்டுக்காரியிடம் அடிவாங்கவேண்டியுள்ளது” என்றார். அப்படி ஒரு சாதனையை செய்திருப்பேனென்று எனக்கே நம்பிக்கை இல்லை. விசாரித்தேன்.

ஆட்டோகிராஃப் பெற்ற நண்பர் படிக்கும் காலத்தில் தன் அகங்கவர்ந்த ஒருவரைக் குறித்து அகங்கனிந்து அடிக்கடி சொல்லியதுண்டு. வாழ்க்கைத்துணையாக அவரே வர வேண்டும் என்ற வரம் வேண்டியதுமுண்டு..

“நீ உயிருக்குயிராய் நேசிக்கும்————வை வாழ்க்கை துணையாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்க”  என நான் வாழ்த்தி எழுதியதாக அவர் சொன்னார்.

“நல்வாழ்த்து தானே நல்கியுள்ளேன் “என்றேன்.

அதை அவர் மனைவி படித்து விட்டு, அந்த ———-வை பற்றி விசாரிப்பதாக, அதுவும் சில நேரம் விசாரணை பட பாணியில் விசாரிப்பதாக சொல்லி சோகப்பட்டார்...

வாழ்த்தும் கூட வாழவந்தவரிடம்
வலி வாங்க வழிவகுக்கும் போலும்,

வாழ்த்துக்கு இவ்வளவு வலிமை இருப்பதால் ஆட்டோகிராஃபில் வாழ்த்தும் இளையதலைமுறை கவனமாகவும், தொலைநோக்கோடும் சிந்தித்து வாழ்த்தவேண்டும் என்பதே பதிவின் நோக்கம்.

வகையாக சிக்கவைக்கும் வகையில் வாழ்த்திய எனக்கு இரவு விருந்தளித்து பேருந்தில் ஏற்றியும் விட்டுவிட்டு தாமதமாக வீடு போகும் தொழிலதிபருக்கு இன்று விசாரணை(செம சாத்து) இல்லாதிருப்பதாக...!

நன்றி : பேராசிரியர் ஹாஜா கனி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...