கேடில்லாத ஆன்மீக அரசியலுக்கு கோடியும் தேவையில்லை!

January 04, 2018
பகிருங்கள்:

ந்த சமூகத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் எத்தனையோ தன்னார்வ சேவகர்கள், அறிவு ஜீவிகள், அரசியல் தெளிவுள்ளவர்கள் என்ன காரணங்களுக்காக தேர்தல் அரசியலில் களம் காணத் தயங்குகிறார்களோ, அந்த காரணம் அப்படியே நிலுவையில் நிறகிறது!, கோடிகள் இல்லாமல் கோட்டையை நெருங்க முடியாது!

புதியன புகுதலும், பழயன கழிதலும் காலத்தின் கட்டாயம். ஆனால் அரசியலில் மட்டும் பழயதும் புதியதும் ஒரே குட்டைக்குள் விழுந்து குழப்புகின்றன. பின் தெளிவு எப்படிப் பிறக்கும்?

அன்னை தெரசாவிடம் ஒருவன் சென்று கேட்டான், "நான் சமூக சேவையாற்றவேண்டும் அதற்கு எந்த இயக்கத்தில், கட்சியில், அமைப்பில் சேருவது நல்லது?" என்று.

அந்த மாதரசி சொன்னார், " நீ உன்னால் முடிந்த சேவையாற்ற உடனே தெருவில் இறங்கு!; உன் பின்னால் இயக்கங்களும் அமைப்புகளும் தானே வரும்!" என்று.

ஆனால், இப்போதெல்லாம் நல்ல சேவைகளைக்கூட விளம்பரப்படுத்தும் மேனா மினுக்கி வேலைப்பாடுகளைத்தான் சில அமைப்புகள் செய்து வருகின்றன. ஆன்மீகம் கலந்த சேவை என்பது இறை திருப்திக்காக செய்யப்படவேண்டும். அது மனிதம் காப்பதற்காக, காக்கப்படும் அவர்களின் சுயமரியாதையைச் சிதைக்காத வண்ணம் இருக்க வேண்டும். இதற்கு விளம்பர மேற்பூச்சுக்கள் என்பதே முதற் கோணல்!.

அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள், இன்றய பிரச்சினைகளைப் பற்றி பேசுங்கள், கேள்வி கேளுங்கள், உங்கள் பகுதிகளில் அரசுக்கு அப்பாற்பட்ட வகையிலோ அல்லது அரசின் துணையோடோ நடக்கக்கூடிய நற் செயல்களில் ஈடுபடுங்கள் என்றெல்லாம் ஒரு தலைவன் சொன்னால் அதனை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்.

கட்சி ஆரம்பிக்கப் போகிறேன், சின்னம் இன்னும் முடிவாகவில்லை, வேட்பாளாரக நிற்க ஒரு கோடி இருந்தால் கிட்டே வா? என்றெல்லாம் அறிவித்துக்கொண்டு போவது எந்திரத்தானமான 'காலா'வதியாகிப்போகக்கூடிய ஆபத்தான வழிமுறை என்றே நான் கருதுகிறேன்.

முதலில் ஒரு கோடி செலவிட்டு சட்ட சபைக்கு செல்லக்கூடிய நல்ல மனிதர்கள் இருந்தால் வரவேற்போம். ஆனால் ஒரு வாக்காளனாகிய எனக்கு சேவையாற்ற ஒரு கோடி வீணாக செலவழிக்கும் ஒரு முட்டாளுக்கு நான் ஓட்டுப் போட விரும்புவேனா?. மெய்யாகவே எனக்கு சேவையாற்றும் ஒருவனுக்கு நான்தானே தேர்தல் செலவுக்கு பணம் தரவேண்டும்?

சரிதான், கோடிக் கோடியாய் சம்பாதித்தவர்கள் போதுமென்ற மனத்துடன் மக்கள் சேவையாற்ற வரலாம்தானே?

ஆனாலும், இந்த ஒரு கோடி இப்போதைக்கு என்னிடம் தேறாது! : ஆகவே, எம்.ஜி.ஆர் பாணிப் பாட்டொன்றில் லயித்து விடுகிறேன்! 

"
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்!

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்! "

- மதுக்கூர் N.S.M. ஷாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!