பிரவீண் தொகாடியாவுக்கு என்ன ஆயிற்று?

January 22, 2018
பகிருங்கள்:

விஷ்வ இந்து பரிஷத்தின் தூண் என்று வர்ணிக்கப்படும் பிரவீண் தொகாடியா தற்போது மரண பயத்தில் இருக்கிறார்.

பிரவீண் தொகாடியாவை கொல்ல கங்கனம் கட்டிக் கொண்டு இருப்பவர்கள் வேறு யாரும் அல்ல அவரால் வார்த்தெடுக்கப்பட்டு இப்போது ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் அவரது சகாக்கள்தான்.

வடமாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறியூட்டும் பேச்சுக்களால் மதவாதத்தை தூண்டி, அப்பாவி இந்துக்களை முஸ்லிம்களிடமிருந்து தனிமைப் படுத்த பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டவர் பிரவீண் தொகாடியா. அதில் வெற்றியும் கண்டனர் இந்துத்துவாவினர்.

ஆனால் மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜகவை தன் கையசைவின் மூலம் ஆட்டிப்படைக்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவு இன்று அவரது உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பத்து வருடத்திற்கு முந்தைய ஒரு வழக்கை தூசி தட்டி ராஜஸ்தான் மாநில போலீஸார் என்னை கைது செய்ய கடந்த வாரம் வந்தனர். எனக்கு போலீசாரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றுவிட்டேன். அதன்பின் நினைவுவந்தபோது, அடுத்த நாள் காலை அகமதாபாத் மருத்துவமனையில் ஒன்றில் இருந்தேன்". என்றார்.

வெறியூட்டும் பேச்சுக்களால் பல எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் தொகாடியாவுக்கு எப்பேற்பட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கும்? ஆனால் அதையும் மீறி அவர் ஆட்டோவில் தப்பியதாகவும், சுய நினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சென்ற வாரம் தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் வெளியானது நகைப்புக்குரியது.

அவருக்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே சென்றார்கள்?. தன் தலைவருக்கு ஒரு ஆபத்து என்றவுடன் அவரது தொண்டர்கள் எப்படி செயல்பட்டிருக்க வேண்டும்? ஆனால் பெயருக்கு நடந்த ஆர்ப்பாட்டங்கள் அதுவும் பெரிய அளவில் இல்லை. இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவையாக தெரிகிறது.

ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்களை தன் கையசைவின் மூலம் செயல்பட வைக்க வேண்டும் என நினைத்தால் சாதாரண மனிதனாக்கப்படுவாய் என்பது தொகாடியாவின் நிகழ்வில் தெளிவாகிறது. அவருக்காக யாரும் இப்போது ஆதரவு கரம் நீட்டவில்லை. ஆட்சியாளர்கள் தேவைக்கு தொகாடியாவை பயன்படுத்திவிட்டு இப்போது ஆட்சியும் பலமும் தன் கையில் இருப்பதால் அவரை தூக்கி எறிய தயாராகிவிட்டனர்.

இப்போது என் உயிருக்கு ஆபத்து என்று கதறுகிறார். ஆளில்லா வனாந்திரத்தில் தனித்து விடப்பட்டு இருக்கிறார் தொகாடியா. இது தொகாடியாவுக்கு மட்டுமன்று. ஆர்.எஸ்.எஸ் , இந்துத்வா தலைவர்கள் பலருக்கு ஆட்சியில் இருப்பவர்களிடமிருந்து வரும் ஒரு எச்சரிக்கையும் கூட .

- அன்பழகன்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!