இதுதான் கிளீன் இந்தியாவா?

January 24, 2018
பகிருங்கள்:

இந்தியாவில் சுமார் 62 சதவீத பெண்கள் மாதவிடாய் காலத்தில் நாப்கினுக்கு பதிலாக சுகாதாரமற்ற துணிகளை பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

நாப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவீத ஜி.எஸ்.டியை நீக்கக்கோரி பெண்கள் பலவழிகளில் போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் தேசிய குடும்ப சுகாதாரம் என்ற அமைப்பு, இந்தியப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவது நாப்கின்களா அல்லது துணிகளா என்பது குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

அதில் பெரும்பாலான இந்தியப் பெண்கள் சுகாதாரமற்ற துணிகளையே, இன்னும் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.நாட்டில் 42 சதவிகித பெண்களே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தி வருகின்றனர், அவற்றுள் 16 சதவிகிதம் பேர் உள்ளூர்களில் தயாரிக்கப்படும் நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்; நகர்ப்புறங்களை எடுத்துக் கொண்டால் 78 சதவிகித பெண்கள் நாப்கின்களை பயன்படுத்தி வருகின்றனர்; கிராமப்புறங்களில் 62 சதவிகிதமான பெண்கள் இன்னும் சுகாதாரமற்ற வகையிலான துணிகளையே பயன்படுத்தும் அவலம் இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

பீகாரை எடுத்துக் கொண்டால், நாப்கின் பயன்படுத்தாத- இன்னமும் துணியைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 82 சதவிகிதமாக உள்ளதாகவும், சத்தீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் இதேநிலைதான் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

நாட்டிலேயே மிசோரம் (93 சதவிகிதம்), தமிழ்நாடு (91 சதவிகிதம்), கேரளம் (90 சதவிகிதம்), கோவா (89 சதவிகிதம்), சிக்கிம் (85 சதவிகிதம்) ஆகிய மாநிலங்களில் மட்டும்தான் அதிகளவிலான பெண்கள் நாப்கின்களை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் மாதவிடாய் காலத்தை எதிர்கொள்வதாக கூறும் ஆய்வு, மகாராஷ்ட்டிரா (50 சதவிகிதம்), கர்நாடகம் (56 சதவிகிதம்), ஆந்திரா (43 சதவிகிதம்) ஆகிய மாநிலங்களிலும் சரிபாதி எண்ணிக்கையில் பெண்கள் நாப்கின்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.

சிறிய மாநிலங்களான உத்தரகண்டில் 55 சதவிகித இளம்பெண்கள் துணியையே பயன்படுத்துவதால் அவர்களுக்கு எளிதில் நோய் தொற்றுகள் ஏற்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ள தேசிய குடும்ப சுகாதார அமைப்பின் அறிக்கையானது, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 62 சதவிகித பெண்கள் (15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்) நாப்கின்களுக்கு பதிலாக துணியையே பயன்படுத்துகின்றனர் என்று கூறுகிறது.

கல்வி மற்றும் வசதி வாய்ப்புக்கும், சுகாதார முறையில் மாதவிடாயை எதிர்கொள்வதற்கும் நேரடி தொடர்பு உடையதாக கூறும் ஆய்வு, 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களில்- பள்ளிச் செல்லாதோரை காட்டிலும்- பள்ளி செல்பவர்களே 4 மடங்கிற்கும் அதிகமாக நாப்கின்கள் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்; அதேபோல் வசதியற்ற பெண்களை காட்டிலும் வசதியுடைய பெண்களே நாப்கின்களை பயன்படுத்துவதை விரும்புகின்றனர் என்று பட்டியலிட்டுள்ளது.

ஏற்கனவே நாப்கின்கள் பயன்படுத்தி வந்தவர்கள் கூட ஜி.எஸ்.டியினால் பழைய நாப்கின் இல்லாத முறையை பின்பற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நாப்கின் பயன்படுத்தப்படுவதில்லை என்றால் பெண்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளதாக கிராமப்புரங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளீன் இந்தியா, தூய்மை இந்தியா’ என்றெல்லாம் கதையளக்கும் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் சுகாதார வாழ்வுக்கு மிக முக்கியமாக மாதவிடாய் காலங்களில் அவர்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு ஜிஎஸ்டி நீக்கப்பட்டு, ஜி.எஸ்டி விதிக்கப்படாத நாப்கின்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

-அன்பழகன்

 

தற்போது வாசிக்கப்படுபவை!