கஃபீல் கானால் உயிர் காக்கப் பட்ட குழந்தைகள் - நன்றி கெட்டவர்களா மக்கள்?

April 30, 2018

ழுமாத சிறை வாசத்திற்குப் பிறகு கோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல்கான் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆக்சிஜன் சிலிண்டர்கள் தீர்ந்துபோனதால், மூளைவீக்கப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தன. அப்போது தன்னால் முடிந்தளவிற்கு சிலிண்டர்களை வெளியில் வாங்கி குழந்தைகளைக் காப்பாற்றியவர் மருத்துவர் கஃபீல்கான். அப்போது உ.பி மக்களாலும், உயிர் காக்கப் பட்ட குழந்தைகளாலும் மேலும் அனைத்து ஊடகங்களிலும் ஹீரோவாக சித்தரிக்கப் பட்டார் கஃபீல்கான்.

ஆனால் இதனால் பொறாமை கொண்ட இந்துத்வ வெறி கொண்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அரசு மீதான தவறை மறைக்க டாக்டர் கஃபீல் கானை பலிகடாவாக்க முயன்றது. அதன் விளைவாக குழந்தைகள் இறப்புக்கு காரணம் டாக்டர் கஃபீல் கான் என்று பொய்யான குற்றச் சாட்டை பதிவு செய்து சிறையில் தள்ளியது. இவ்விவகாரம் நாடளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏழு மாதங்கள் சிறையில் இருந்த கஃபீல்கான் பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. அவர் சிறையில் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல்நலக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கஃபீல்கானுக்கு உரிய நீதி வழங்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கிடையே கஃபீல்கான் சிறையில் இருந்தபடி தனது நிலை குறித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், நிர்வாகக் கோளாறுகளை மறைப்பதற்காக தான் பலிகடா ஆக்கப்பட்டதாகவும், தன் வாழ்க்கை தற்போது தலைகீழாக மாறிப்போனதாகவும் எழுதியிருந்தார். மேலும் சிறையில் டாக்டர் கஃபீல் கானின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதையும் அனைவராலும் உணர முடிந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் கஃபீல்கான் தரப்பில் மீண்டும் ஜாமீன் கோரி மனு கொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் கஃபீல்கானுக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்த நிலையில், அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான்தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கும், கஃபீல்கானுக்கும் இடையே எந்த வர்த்தக தொடர்பும் இல்லை. மருத்துவ பணியில் அலட்சியமாக அவர் நடந்துகொண்டதாக தகவல்கள் இல்லை. இதுவரை அவர்மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், சாட்சிகளை மிரட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை’ எனக் கூறி அரசு மனுவை தள்ளுபடி செய்து, மருத்துவர் கஃபீல்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மற்றும் ஒரு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. டாக்டர் கஃபீல் கானால் காப்பாற்றப் பட்ட ஏராளமான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வு இல்லையா? ஏன் அவர்கள் கஃபீல் கானின் விடுதலைக்காக போராடவில்லை என்பதே அந்த குரல்கள். அதேவேளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மீதான அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

-அன்பழகன் 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!