புதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி!

நவம்பர் 08, 2018 814

மோடியின் இடைத் தேர்தல் தோல்வி பாஜகவுக்கு ஒரு பிரச்சினையே அல்ல என்னுமளவுக்கு டிரம்பின் இடைத்தேர்தல் தோல்வி ஒரு பெரும் பிரச்சினையாக வரும் சூழல்.

அமெரிக்க 'காங்கிரசில்' டிரம்பின் செல்வாக்கு சரிவது அவர் கொண்டுவரும் திட்டங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். மேலும் அவர் மீதான விசாரணைகளும் துரிதப்படுத்தப்படலாம்.

நம் நாட்டில் காங்கிரஸ் கட்சியால் மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டது என்று அருதியிட்டுச் சொல்லிவிட முடியாது. மோடியோ பாஜகவோ காங்கிரசிடம் தோற்கவில்லை, நாட்டு மக்களிடம்தான் தோற்றுக்கொண்டிருக்கின்றனர்.

ஆக, எதிர்கால வாய்ப்புகளை, பாசிஸ அரசுகளுக்கெதிரான எதிர்ப்புகளை ஒருங்கிணைத்துச் செல்ல நம்மிடம் என்ன திட்டங்கள் வழிமுறைகள் இருக்கின்றன? வெறும் வெற்றிடத்தை வைத்துக்கொண்டு தேசிய நீரோட்டத்தை இணைக்கமுடியாது. அதற்கான புதிய தூர்வாரும் பணிகள் இப்போதே ஆரம்பமாக வேண்டும்.

அதற்கு மாநிலக் கூட்டணிகள் என்ற கால்வாய்கள் சரியான வழிமுறைகளில் ஒருங்கிணைக்கப்படவேண்டும். இம்முயற்சியின்போதே,சாக்கடை நீரோடைகளைக் கலந்துவிடாமல் களையெடுக்கும் முயற்சிகளிலும் கவனம் தேவை. நாட்டை தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் அரசியல் கூட்டணிகள் தேவை, அதே சமயம் கெட்ட அணிகள் தனிமைப்படுத்தப்படவேண்டும்.

இதற்கு வேண்டிய தெளிவான சனநாயக வழிமுறைகளில் அமையும் ஒருங்கிணைந்த தேசிய முயற்சியை முன்னெடுக்க காங்கிரஸ் என்ற நாடுதழுவிய இயக்கம் மீண்டெழுந்து முன்வந்தால் மகிழ்ச்சி. வரும்போது பழய மூட்டைகளைச் சுமந்து வராமல் புதிதாய் பிறந்துவருவதுபோல வரவேண்டும்.

அதில் இதுவரை காங்கிரசில் அல்லது அதன் கூட்டணியில் இருந்து ஊழல்வாதிகள் என்று பெயரெடுத்தவர்கள் ( குற்றம் சாட்டப்பட்டு அதற்கான முகந்திரம் இருப்பதாக நாட்டு மக்களால் அறியப்பட்டவர்கள் உட்பட) திரும்பவும் மேடையில் தோன்றாத புதிய சூழலை ஏற்படுத்த அக்கட்சியின் தலைமை உறுதி செய்யவேண்டும்.

அப்படியொரு முயற்சி நடந்தால் அதற்கு காங்கிரசை விரும்பாத (பாஜகவில் உள்ள சனநாயகவாதிகளும் நேர்மையாளர்களும்) பிறரும் ஆதரவுக்கரம் நீட்டவேண்டும்.

காரணம் அதில் தேசத்திற்கு தேவையான மாற்று இருக்கிறது. இதே வழிமுறை பாஜகவுக்கும் பொருந்தும். ஆனால் இம்முறை இந்த அரசு மாற்றப்பட்டால்தான் பாஜகவினர் தம்மை மறுபரிசீலணை செய்யும் வழி ஏற்படும். அதனால் அவர்களுக்கு ஒரு ஐந்து வருடமாவது கால அவகாசம் கொடுத்தேயாகவேண்டும்.

இப்படி நடக்காமல் வெறும் கூட்டணிக் கணக்குகளோடும் ஃப்ளக்ஸ்களோடும், ஏராளமான பணத்தோடும் ஊருக்குள் எந்த கூட்டணிகள் வந்தாலும், மக்கள் செய்யவேண்டியது:

தொகுதியின் நல்ல வேட்பாளர்கள் மட்டுமே அவர்களின் தனிப்பட்ட சிறப்புகளுக்காக வாக்களிக்கப்பட வேண்டும். ஊரில் சமூக அக்கறையுள்ளவர்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நின்று ஊராட்சி நகராட்சிகளின் ஆளுமைக்கு பொறுப்பேற்கவேண்டும். அவர்களில் சிறந்தவர்களை தங்களின் தொகுதியின் வேட்பாளர்களாக்கவும் தூண்டுதல் கொடுக்கவேண்டும்.

இதன் மூலம் மக்கள் பெரிய அரசியல் கட்சிகளுக்கு பாடம் நடத்த முடியும்!. இதனை விடுத்து தேர்தலுக்கு முதல் நாள் அறிவு ஜீவிகள் என்ற பெயரில் அறிக்கை விடுவதால் என்ன பயன்?


N.S.M. ஷாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...