வளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள்

ஜனவரி 10, 2019 963

வளைகுடா நாடுகளை நோக்கி பயணித்த இளைஞர்கள் இப்போது வளைகுடா நாடுகளே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.

ஆரம்ப காலங்களில் திருமணம் முடித்த உடனேயே எத்தனையோ வாலிபர்கள் குடும்ப பாரத்தை சுமக்க வளைகுடாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களில் எத்தனை பேர் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இல்லற வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்கள்? திருமணம் முடித்த ஒரேநாளில், ஒரேவாரத்தில், ஒரேமாதத்தில் என எத்தனை சகோதர-சகோதரிகள் திருமண பந்தத்திற்கு முன்னாலேயே வளைகுடாவுக்கு வாழ்க்கைப் பட்டதால் பிரிய மனமில்லாமல் வாழ்க்கைத் துணையைப் பிரிந்து செல்கிறார்கள். கணவன், மனைவிக்கு மற்றும் மனைவி, கணவருக்கு செய்யவேண்டிய கடமைகள் மிகவும் குறைவு.

இதையெல்லாம் தாண்டி குடும்ப தேவைகள் அவர்களை வளைகுடா நாடுகளில் நிரந்தரமாக்கி விடுகிறது. மனைவியை அழைத்து வந்து கூடவே வைத்துக் கொள்ளலாம் என்றால் ஊதிய பற்றாக்குறையால் பலருக்கு அந்த பாக்கியம் வாய்ப்பதில்லை.

இதனால் முதலில் அவர்கள் குடும்பத்தினரை பிரிந்து வாழும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இரண்டாவது. குடும்ப தேவைகள் பொருளீட்டும் வரவை விட அதிகமாக இருப்பதால் அடுத்தடுத்து எப்படி தம் தேவைகளை நிறைவேற்றுவோம் என்ற அழுத்தம் கூடவே இணைந்து விடுகின்றன.

மன ரீதியாக அதிக அளவில் பாதிக்கப் படுவதால் வளைகுடா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவை விரைவாக தாக்கி விடுகின்றன.

இது இப்படியிருக்க சமீப காலங்களாக உலக பொருளாதார சரிவு வளைகுடாவை பெரிதும் பாதித்துள்ளது. பல நிறுவனங்கள் மூடப் பட்டுவிட்டன. பலர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக தனி தொழில் புரிந்து வந்த சிறு வணிகர்கள் திடீரென பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் பணிபுரிந்தவர்களுக்கு போதிய ஊதியம் இல்லை. பல நிறுவனங்களில் பல மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளன.

இவையெல்லாம் வளைகுடாவில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சமீப காலங்களில் 25 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு கூட திடீர் மாரடைப்பு போன்றவைகள் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்து விடுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இவற்றை சரிசெய்ய பாதிக்கப் பட்டவர்களுக்கு சரியான கவுன்சிலிங் அவசியம். இதுவே இப்போதைய அவசியத் தேவை.

 - அன்பழகன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...