அன்றும் இன்றும்....!

ஏப்ரல் 01, 2019 655

துபாய் போன்ற உலகின் மிக முக்கியமான வணிக நகரத்தில் மக்களுக்கு இடையே சகிப்புத்தன்மை என்பது மிக பிரதானமான ஒன்று.

பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரம் கொண்ட மக்கள் கூடும் ஒரு சந்தையில், ஏற்படும் சிறு சலசலப்புகள் கூட அந்த நாட்டின் வளர்ச்சியை அதிகம் பாதிக்கும்.

இதை உணர்ந்துதான் அமீரகம்(U.A.E) தொடர்ந்து மக்களுக்கு மத்தியில் சகிப்புத்தன்மையை ஏற்ப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அதில் ஒன்றாகத்தான் இந்த ஆண்டை அமீரகம் "Year Of Tolerance" அதாவது சகிப்புத்தன்மைக்கான ஆண்டு என்று அறிவித்து கொண்டாடுகிறது. சமிபத்தில் அமீரகம் வந்த ராகுல் காந்தி கூட இதை பற்றி அவரது உரையில் குறிப்பிட்டார்.

இன்று துபாயை போல 2000 ஆண்டுகளுக்கு முன் உலகின் மிக முக்கியமான சந்தையாக இருந்த ஒரு இடம் சோழ நாட்டின் புகார் நகரம்.
வளமான புகார் நகரில் பட்டினப் பாக்கம், மருவூர்ப் பாக்கம் என்னும் இரு பகுதிகள் இருந்தன.

பட்டினம் என்றால் நகரம் பாக்கம் என்றால் ஊர். பட்டினமாக உள்ள பெரிய ஊர் என்பதை குறிக்கும் வகையில் பட்டினப் பாக்கம் என்று பெயரிட்டார்கள்.

அதேபோல், (மருவு+ஊர்=மருவூர்) மருவு என்றால் சேர்தல் - கலத்தல் என்று பொருள். பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் கலந்து வாழும் பகுதி என்பதால் மருவூர்ப் பாக்கம் என்று பெயரிட்டார்கள். இந்த மருவூர்ப் பாக்கம் பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இப்படி பாடுகிறார்.

"கயவாய் மருங்கில் காண்போர் தடுக்கும்
பயன்அறவு அறியா யாவனர் இருக்கையும்,
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணாமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுன்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்......"
(சிலம்பு:9-27)

அதாவது, காண்போரை போகவிடாமல் தடுக்கும் யாவனர் இருக்கைகள்- வெளிநாட்டவர் தங்குமிடங்கள், வண்ணக் குழம்பு, சந்தனம், பூ வகைகள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை விற்க்கும் தெருக்கள். அளவிட முடியாத உடைகள், மணி வகைகள், தானிய வகைகள், மீன், இறைச்சி, உப்பு, வெற்றிலை உள்ளிட்ட உணவு பொருட்களை விற்கும் தனிப் பகுதி மற்றும் பல தொழில் வல்லுனர்கள் இருக்கும் பகுதி என இளங்கோவடிகள்
மருவூர்ப் பாக்கத்தை வர்ணிக்கிறார்.

இதில் மிக முக்கியமான வரி "கலம்தரு திருவின் புலம்பெயர் மக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்" - அதாவது கடல் கடந்து வியாபாரம் செய்ய கப்பல்களில் வந்திருக்கும் சீன, அரபு, கிரேக்க, எகிப்து, ரோம மக்களும் தமிழர்களும் இயல்பாக கலந்து வாழ்கிறார்கள் என்கிறார் இளங்கோவடிகள்.

இன்று நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் நாடுகள் கூட பிற மனிதனை சகித்துக் கொண்டு வாழு என்று சொல்லித் தரும் போது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல இனத்தவரோடும் தமிழனால் இயல்பாக கலந்து வாழ முடிந்திருக்கிறது என்பது தமிழரின் பெருமை இல்லையா...? இது தமிழரின் பண்பாட்டுக்கு புகழ் இல்லையா..?

இப்படி உலக மக்களுக்கு எல்லாம் அன்பு காட்டிய இந்த இனம் தான் சொந்த மக்களை சாதியாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அன்று அன்பு செலுத்திய போது இந்த மண் உலகின் மிக வளம் கொண்ட பகுதியாக இருந்தது. இன்று நமக்குள் நாம் சண்டையிடும் போது ஊரான் வந்து நாட்டாமை செய்யும் போராட்ட பூமியாக மாறியுள்ளது.

நம்மை பிரிக்கும் சாதிய வாதத்தையும் காவிய வாதத்தையும் எதிர்ப்போம். அன்பினால் மீண்டும் ஒரு வளமான தமிழ் நாட்டை படைப்போம்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...