கரூரில் ருசிகரம் – ஒரு கிலோ உப்பு ரூ 33,000!

கரூர் (05 ஜன 2020): கருவூர் வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா 31.12.2019, செவ்வாய்கிழமை மாலை பி.எல்.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமையில் பொருளர் கும.குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார்.

சமூகப் பெரியவர்கள் வைரவன், அருணாசலம் கெளரவிக்கப்பட்டு அவர்கள் இளை எடுத்து நோன்பு களைந்து பின் அவர்கள் கூடியிருந்த 600 பேருக்கு இளை எடுத்துக் கொடுக்க அனைவரும் நோன்பு களைந்தனர்.

தொடர்ந்து வழிபாட்டிற்காக பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட 21 பொருட்களை சமூக அறங்களுக்கான நிதித் திரட்டலாய் மேலை பழநியப்பன் ஏலம் நடத்தினார். இதில் ருசிகரமாக, உப்பு ஒரு கிலோ 33,000 ரூபாய்க்கும் மாலை 16,000 ரூபாய்க்கும், கற்கண்டு 1 கிலோ 6000 ரூபாய் என மொத்தம் இரண்டு லட்சத்து ஒரு ஆயிரம் ஏலம் நடைபெற்றது.

சிறந்த மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகள் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டினர்.

தொடர்ந்து ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் குழுவினரின் பாட்டுப் பட்டி மன்றம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

ரெத்தினம், வைஷ்ணவி மெய்யப்பன், அகல்யா மெய்யப்பன், சோபிகா பழனியப்பன், கைலாசம் கணேசன், அருணாசலம் ராமையா,அழகப்பன், உள்ளிட்ட திரளானவர்களும் குளித்தலை புலியூர் அய்யர்மலை, வேலூர், புகழூர், வெள்ளியனை காந்தி கிராமம், வெங்கமேடு, தான் தோன்றி மலை பகுதி வாழ் சமூக மக்களும் பங்கேற்றனர்.

ஹாட் நியூஸ்: