கோப்பையுடன் வெல் கம் பேக் சென்னை சூப்பர் கிங்ஸ்!

மே 28, 2018 633

மும்பை (28 மே 2018): ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் இங்கிடி மற்றும் கரண் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்க்கொண்டு 179 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அதேநேரம், நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியை 3 முறை வீழ்த்திய நம்பிக்கையோடு சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டூப்ளசி ஆகியோர் தொடங்கினர்.

ஹைதராபாத் சார்பில் முதல் ஓவர் வீசிய புவனேஷ் குமார், வாட்சனை மிரட்டினார். ஸ்விங் பந்துகளால் திணறடித்த புவனேஷ்வர் குமார், முதல் ஓவரை மெய்டனாக வீசினார். தொடர்ந்து ஹைதராபாத் வீரர்கள் கட்டுக்கோப்பாக லைன் அண்ட் லெந்தில் பந்துவீச அனுபவ வீரர்களான வாட்சன் மற்றும் டூப்ளசி ஆகியோர் ரன் குவிக்கத் திணறினர். சந்தீப் ஷர்மா வீசிய நான்காவது ஓவரின் கடைசி பந்தில் டூப்ளசி ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, ஷேன் வாட்சனுடன், ரெய்னா கைகோத்தார். இந்த ஜோடி பேட் செய்யத் தொடங்கியதுமே போட்டி சென்னை அணியின் பக்கம் திரும்பியது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்த சென்னை, இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி மிக வேகமாக முன்னேறியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவர், சந்தித்த முதல் 10 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில், பிராத்வொய்ட் வீசிய பவுன்சரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை பவுண்டரி எல்லையை நோக்கி விரட்டிக் கொண்டிருந்த வாட்சன், 51 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி எட்டியது. இதன்மூலம், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அம்பாதி ராயுடு 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...