பாலியல் புகாரில் சிக்கிய கபடி பயிற்சியாளர் தற்கொலை!

அக்டோபர் 16, 2018 533

பெங்களூரு (16 அக் 2018): பாலியல் புகாரில் சிக்கிய கபடி பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்த ருத்ரப்பா ஹோசாமனி மீது 13 வயது சிறுமி பாலியல் புகார் கூறியதால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானார். இந்நிலையில் அவமானம் தாங்காமல் நேற்று பெங்களூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெங்களுரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு மூத்த கபடி பயிற்சியாளராக இருப்பவர் ருத்ரப்பா ஹோசாமனி. 59-வயதான இவர் மீது கடந்த வாரம் 13-வயது சிறுமி பாலியல் புகார் கூறினார். உடைமாற்றும் அறைக்குள் வந்து ருத்ரப்பா பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு வந்து ருத்ரப்பாவை தாக்கினர். இது தொடர்பாக சிறுமி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று அறை எடுத்து தங்கிய அவர், அங்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ருத்ரப்பா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், “தற்கொலை செய்வதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இப்போது எந்த நிலையிலும் உதவியில்லாமல் உள்ளேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என மகனிடம் கேட்டுள்ள ருத்ரப்பா, தனது உடலை தானம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அழுகிய நிலையில் ருத்ரப்பா உடல் மீட்கப்பட்டுள்ளதால் தானம் செய்வது கடினம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...