கிழிந்த செருப்புடன் ஒடினேன் - தங்க மங்கை கோமதி மாரிமுத்து!

ஏப்ரல் 27, 2019 655

சென்னை (27 ஏப் 2019) : கிழிந்த செருப்புடன் ஓடி பயிற்சி பெற்று தங்கம் வென்றுள்ளேன் என்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று இந்தியாவிற்கு வரலாறு சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் அவருக்கு பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில், தாயகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு உற்சாக வரவவெற்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் தெரிவிக்கையில்,"இந்த வெற்றியை கொண்டாட தந்தை இல்லாதது வருத்தம் அளிக்கிறது. என் பயிற்சியாளரும் இறந்து விட்டார். இரண்டு வருடங்கள் பயிற்சி இன்றி இருந்தேன். பிறகு நானே முயன்று என் சொந்த காசிலேயே கத்தார் சென்று இந்த வெற்றியை பெற்றுள்ளேன்.

என்னுடன் வந்தவர்கள் எல்லாம் ஆடம்பரமான உடை அணிந்திருந்தனர். நான் சாதாரண உடைதான் அணிந்திருந்தேன். என் வெற்றியைக் கண்டு பலர் உதவுவதாக கூறினர். எனினும் உலக சாம்பியன் போட்டிக்கும், ஒலிம்பிக் போட்டிக்கும் மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். எனக்கு உதவுகிறார்களோ இல்லையோ, என்னைப் போன்று திறமை இருந்தும், பொருளாதார உதவி இல்லாதவர்களுக்காகவாவது அரசு உதவ வேண்டும்." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...