போராடித் தோற்றது வங்கதேசம்!

ஜூன் 21, 2019 344

லண்டன் (20 ஜூன் 2019): இன்று உலகக் கோப்பை மட்டைப்பந்து சுற்று ஆட்டமொன்றில் வலுவான ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய வங்கதேச அணி போராடித் தோற்றது. 50 சுற்று வீச்சுகளுக்கு 333 ஓட்டங்கள் எடுத்த வங்கதேச அணி 48 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோல்வி கண்டது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி 381 ஓட்டங்கள் குவித்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 166 ஓட்டங்களை அதிரடியாக எடுத்து மலைக்க வைத்தார். 150 ஓட்டங்களுக்கும் மேலாக அவர் எடுப்பது இது ஆறாவது முறையாகும். இவ்வகையில் இந்திய அணித் தலைவர் கோஹ்லியின் சாதனையை வார்னர் சமன் செய்துள்ளார். அந்த அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் முதிர்ச்சியாக விளையாடி 53 ஓட்டங்கள் குவித்து வெளியேற, மற்றொரு வீரர் உஸ்மான் க்வாஜா அதிரடியாக 89 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிகவும் விறுவிறுப்பாக ஆடிய மேக்ஸ்வேல் 10 பந்துகளில் 32 ஓட்டங்கள் என்ற அரிய சாதனையை நிகழ்த்தினார். வங்கதேச வீரர் சவ்மியா சர்க்கார் 3 ஆட்டக்காரர்களை வீழ்த்தினார்.

பிறகு அதிரடியாகத் தொடங்கிய வங்கதேசம் நன்கு ஆடத்தொடங்கிய சவ்மியா சர்க்காரை ஓட்டமுறிப்பு முறையில் இழந்ததும், கடந்த மேற்கிந்தியத்துக்கு எதிரான ஆட்டத்தின் அதிரடி நாயகர்கள் ஷகிப், லிட்டன் தாஸ் ஆகியோர் குறுகிய நேரத்தில் ஆட்டமிழந்ததும் வங்கதேசத்தின் தோல்வியை உறுதிப்படுத்தின. வார்னர் முதலிலேயே கொடுத்த பிடியும், பிடிக்கப்படாமல் விடப்பட்டது

முஷ்ஃபிகுர் ரஹீம் தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தாலும், மஹ்மூதுல்லா கடைசி சுற்றுக்களில் அதிரடியைத் தொடங்கினாலும் பலனின்றிப் போனது.

இன்னும் சில ஆறடிகளும் நாலடிகளும் வங்கதேசம் அடித்திருந்தால் முடிவு மாறியிருக்கலாம் எனினும், மிக மலைப்பான ஓர் எண்ணிக்கையை தன்னம்பிக்கையுடன் விரட்டிப் பிடிக்க ஆடிய வங்கதேசத்தின் விளையாட்டுத் திறனில் மற்ற சில நாடுகளுக்குப் பாடம் இருக்கிறது எனலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...