உலகக் கோப்பை அரையிறுதி - இந்தியா நியூசிலாந்து போட்டி மழையால் தடை!

ஜூலை 09, 2019 416

மான்செஸ்டர் (09 ஜூலை 2019): உலகக்கோப்பை முதலாவது அரையிறுதிப் போட்டியின் பாதி ஆட்டம் மழையால் தடை பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணி நிர்வாகம் மீது டுவிட்டர்வாசிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். புவனேஷ்வர் குமார், பும்ரா புதுப்பந்தில் இணைந்து வீசிய ஓவர்களை நியூசிலாந்து தொடக்க ஜோடி எதிர்கொள்ள திணறியது.

அடுத்து நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. பவர் பிளேயான முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 27 ரன்களே எடுத்திருந்தது.

அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது நிக்கோல்ஸ் ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 51 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.

3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தை ஆபத்தில் இருந்து மீட்டது. மிடில் ஓவர்களில் இந்த ஜோடியை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். நியூசிலாந்து 28.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

கேன் வில்லியம்சன் 79 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அப்போது 67 ரன்கள் எடுத்திருந்தது நிலையில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 95 பந்தில் 6 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்ததும், ராஸ் டெய்லர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் 73 பந்தில் அரைசதம் அடித்தார். நீஷம் (12), கிராண்ட்ஹோம் (16) விரைவில் ஆட்டமிழக்க நியூசிலாந்து சற்று நெருக்கடிக்குள்ளானது.

நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மேலும் மழை தொடர்ந்தால் டக் ஒர்த் லூயிஸ் முறையில் இந்தியா பேட் செய்ய நேரிடும். இது இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...