உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரணங்கள்!

ஜூலை 11, 2019 415

மான்செஸ்டர் (11 ஜூலை 2019): உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்றது.

இன்று பேட்டிங்கை தொடர்ந்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கை நோக்கி பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா (1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல் (1) என அடுத்தடுத்து இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து 10வது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளையும் இழந்து 24 ரன்களைப் பெற்று பரிதாபமான நிலையை அடைந்தது இந்திய அணி.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் விரைவில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி விக்கெட் இழப்பைத் தடுக்க நிதானமாக ஆடினார். தோனி ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்க, ஜடேஜா மறுபக்கம் சிக்ஸர்களை தெறிக்கவிட்டு நம்பிக்கையூட்டினார்.

இந்தியா நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப்போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்தியா. மழை காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசினாலும், இரண்டாம் நாள் பிட்ச்சின் தன்மை, ஷாட் தேர்வு போன்ற விஷயங்கள் இந்தியாவுக்கு நெருக்கடியை தந்தது.

முன்னதாக 50 ஓவர்களில் நியூசிலாந்தை இந்தியா 239 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

தோல்விக்கான காரணங்கள்:

இரண்டு நாட்கள் போட்டி என்பதால், பலவீனமான நியூசிலாந்து சூழலுக்கேற்ப முன்னிலை பெற ஏதுவாக வானிலை அமைந்தது. முன்னாள் வீரர்கள் பலரும் மான்செஸ்டர் பிட்ச்சை குப்பை என விமர்சிக்கும் அளவுக்கு பிட்சின் தன்மை இருந்தது.

நியூசிலாந்தை லீக் போட்டிகளில் சந்திக்காமல் போனது முக்கிய காரணம். அந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த போட்டியை ஆடியிருந்தால் நியூசிலாந்தின் அணுகுமுறையை கணித்து கூடுதல் பலத்தோடு இந்தியா விளையாடியிருக்க முடியும்.

மிடில் ஆர்டர் மீது தான் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இன்றைய போட்டியில் மிடில ஆர்டர் சிறப்பான பெர்ஃபார்மென்ஸையே கொடுத்திருக்கிறது. ஆனால், இந்திய அணியின் பலமாக பார்க்கப்பட்ட டாப் ஆர்டர் இந்த போட்டியில் நிலைத்து நின்று ஆடாதது மிகப் பெரும் மைனஸ்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மைதானத்தை தேர்வு செய்தது. அரையிறுதி போன்ற முக்கியமான போட்டிகளை வானிலை பாதிக்காத மைதானத்தில் வைப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.

தோனி இறங்க வேண்டிய இடத்தில் பாண்ட்யா இறங்கியது கவனிக்கப்பட வேண்டிய காரணம். டாப் ஆர்டர் முழுவதும் வீழ்ந்த நிலையில், அனுபவம் குறைந்த ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். அந்த இடத்தில் பாண்ட்யாவுக்கு பதில் தோனி களம் இறக்கப்பட்டிருக்கலாம். சவாலான நேரத்தில் தோனியின் அனுபவம் நிச்சயம் கைகொடுத்திருக்கும். தோனியின் அறிவுரை பண்ட்டிற்கு கூடுதல் நம்பிக்கை கொடுத்திருக்கும். பாண்ட்யா இறக்கப்பட்டதால், பண்ட்டின் பங்களிப்பு குறைந்ததோடு, தொடர்ந்து சரிந்து விக்கெட்களால் ஏற்பட்ட அழுத்தத்தை குறைக்கவும் தவறிவிட்டது இந்திய அணி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...