பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமீரகத்தில் நடைபெற்றும் வரும் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாம் டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் சிறப்பாக பந்துவீசி ஏழு விக்கெட் எடுத்திருந்தார்.
7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களுடன் 3-ம் நாள் ஆட்டத்தை வியாழக்கிழமை தொடர்ந்த பாகிஸ்தான் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட் கீப்பர் அட்னான் அக்மல் 61 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அதன்பின்னர் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்தபோது, கேப்டன் ஸ்டிராஸ் (6 ரன்), அலாஸ்டர் குக் (5), டிராட் (49) ஆகியோர் உமர் குல் வீச்சில் விக்கெட் கீப்பர் அக்மலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக டிராட் 49 ரன்களும், பந்துவீச்சாளர் ஸ்வான் 39 ரன்களும் எடுத்தனர். உமர் குல் 4 விக்கெட்டுகளும், சயீத் அஜ்மல், அப்துர் ரெஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த இங்கிலாந்து 160 ரன்களுக்கு சுருண்டது.
தனது இரண்டாம் இன்னிங்ஸில் வெற்றிக்கு 15 ரன்களே தேவைப்பட, பாகிஸ்தான் 3.4 ஓவர்களில் எடுத்தது. இந்த டெஸ்ட் 3 நாள்களுக்குள் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் அபுதாபியில் ஜனவரி 25-ல் வரும் புதனன்று தொடங்க உள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|