
"சச்சின் ஒரு மிகச்சிறந்த விளையாட்டுவீரர். அவருடன் இணைத்துகூறவோ, அவருக்குப் பகரமாகவோ வேறு கிரிக்கெட்வீரர்கள் இன்று இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் நாம் நினைப்பது நடப்பதில்லை. உலகக்கோப்பையின் உன்னத வெற்றிக்குப் பின்னர் அவர் ஓய்வு பெற்றிருந்திருக்க வேண்டும்" என்றார் இம்ரான்கான்.
சச்சின் டெண்டுல்கர் தான் தன்னைப்பற்றிய முடிவை எடுக்க வேண்டும். ஆனால் அது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதாக அமைவது முக்கியம். அந்த நேரமாக உலகக்கோப்பை வெற்றிக்குப் பிந்தைய நேரம் இருந்தது என்று தொ.கா நேர்காணல் ஒன்றில் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெறுவது என்பது மிகவும் சிரமமான முடிவு தான். எவ்வளவோ பெரிய விளையாட்டுவீரர்கள் கூட இதில் சறுக்கியுள்ளனர் என்ற இம்ரான் கான் 'மாற்று வீரர்களை தேடி வைத்துக்கொள்வது நிர்வாகத் தரப்பினரின் பொறுப்பு" என்றார்
இந்தியாவில், ஒருவர் இருவரல்ல, மூவர் ஓய்வு பெறும் தருணத்தில் உள்ளனர்.இதில் பெரிய பிரச்னை, மாற்றாக சரியான இளம் வீரர்கள் கிடைப்பது தான். மூத்த வீரர்களையும் அணியிலேயே தொடர்ந்து வைத்திருப்பதால் வீரர்களுக்கிடையே இடைவெளி அதிகரிக்கவே செய்கிறது என்றும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.
சச்சினுடைய 100 ஆவது100 தாமதமாகி வருவது பற்றி கேட்கப்பட்டபோது "சாதனைகள் யாவும் அணியின் வெற்றித்தடத்திலேயே அமைய வேண்டும்.சாதனைகளுக்காகவே விளையாடக்கூடாது. சொந்த சாதனைகளை விடவும் அணியின் வெற்றியே முதன்மை இலக்காக இருக்க வேண்டும். சச்சின் ஒரு சிறந்த வீரர். சாதனைகள் என்பனவெல்லாம் வெறும் புள்ளி விபரங்களே. விளையாட்டு வீரர்களின் சிறப்புத்தன்மையை அளவிட அதைத் தாண்டியும் அம்சங்கள் உள்ளன என்பது அவருக்கும் தெரியும் " என்றார் இம்ரான்கான்.
தான் கண்ட மிகச்சிறந்த வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்தான் என்றார் இம்ரான்கான் "அவருடைய சாதனைகளை பார்க்கவே தேவையில்லை, சவால்களை எதிர்கொண்ட சிறந்த வீரர் ரிச்சர்ட்ஸ் ஒருபோதும் சாதனைகளுக்காக விளையாடியதில்லை"
இந்தியா தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் மண்ணைக் கவ்வியுள்ள நிலையில், அந்த நிலையில் தானிருந்தால் உடனடியாக கிரிக்கெட்டை விட்டே விலகி ஓடிப்போயிருப்பேன் என்ற இம்ரான்கான் இந்திய அணி பரிசோதனை செய்துக்கொள்ளும்விதமாக அடுத்து சொன்னார் "20-20 மற்றும் ஐபிஎல் ஆட்டங்களில் அதிக கவனம் செலுத்தினால், டெஸ்ட் போட்டிகளில் விரைவில் வெளிநடப்பு செய்யும் அணியாகத்தான் ஆகவேண்டி இருக்கும்" T20, ஐபிஎல் இவையெல்லாம் பொழுதுபோக்குகள் தான், ஒரு கிரிக்கெட் வீரரின் உண்மையான திறமையை அளவிட டெஸ்ட் போட்டிகளே சிறந்தவை
நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் உறவுகளை மீட்டெடுக்க வேண்டும்; 26/11 சம்பவத்தை பாகிஸ்தானிலும் அனைவரும் கண்டித்துள்ளோம். பாகிஸ்தானிலும் தினந்தோறும் பயங்கரவாத சம்பவங்கள் சீரழிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தமது உறவுக்ளைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்றும் இம்ரான்கான் கூறினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed