சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா

1096

மெல்போர்ன் (19 ஜன 2022): இந்தியாவின் முதல் மகளிர் டென்னிஸ் சூப்பர்ஸ்டாரான சானியா மிர்சா டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

புதன்கிழமை அவர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்தார். 2022 சீசன் தனது கடைசி சீசன் என்றும் உறுதிப்படுத்தினார்.

சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம்களை வென்று WTA இரட்டையர் தரவரிசையில் உச்சத்தை எட்டியுள்ளார். WTA ஒற்றையர் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியரும் அவரே.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த சானியா தனது ஓய்வு திட்டத்தை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஓய்வு பெறுவது இலகுவானது அல்ல என்றாலும், என் 3 வயது மகனுடன் அதிகம் விமானப்பயணம் செய்வதன் மூலம் அவரை கடினத்தில் ஆழ்த்துகிறேன்; அதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்; மேலும் என் உடல் சோர்வாக இருக்கிறது என்று நினைக்கிறேன்; இன்று என் முழங்கால் மிகவும் வலிக்கிறது; நாங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் எனக்கு வயதாகி வருவதும் ஒரு காரணம்” என்று கூறியுள்ளார்.