"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் மோசமான டெஸ்ட் ஆட்டம் குறித்து நான் வெட்கப்படுகிறேன்" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த 3 டெஸ்டிலும் இந்தியா படுதோல்வி அடைந்து, டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் பறி கொடுத்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்,
"இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தை பார்த்து ஒரு கிரிக்கெட் வீரர் என்ற முறையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மிக மோசமாக விளையாடுகிறது. அவர்கள் எல்லா வகையிலும் தவறாக விளையாடுகிறார்கள்.
உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்து இந்தியா 6 மாதம் மட்டும் நன்றாக விளையாடியது. தற்போது அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. நான் வீரர்கள் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. இதே வீரர்கள் தான் கடந்த காலங்களில் பெருமைப்படும்படி நன்றாக விளையாடினார்கள். இப்போது அவர்கள் ஆட்டம் எடுபட வில்லை என்றால் என்னவென்று சொல்வது?
திறமையான வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். வீரர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் விளையாட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|