"சச்சின் தென்டுல்கர் ஓய்வுபெற காலம் தாழ்த்தி வருவது நல்ல வீரருக்கான அழகல்ல" என இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஒரு ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் தென்டுல்கருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது.
"சச்சின் கடந்த உலக கோப்பை முடிந்த தருணத்தில் அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு அறிவித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஓய்வுபெற அவர் காலம் தாழ்த்தி வருவது நல்ல வீரருக்கு அழகல்ல. அவர் தற்போது 39 வயதை தொட்டு விட்டார். சமீபத்திய பின்னடைவு வருத்தம் அளிக்கிறது.
அவரைப் பொறுத்த வரை நல்ல கிரிக்கெட் வீரர், நாட்டிற்கு நல்ல பல சாதனைகளை புரிந்திருக்கிறார். கிரிக்கெட்டை மிக்க நேசிப்பவரான அவரை பலர் கிரிக்கெட்டில் இருந்து விலக விடாமல் தடுக்கின்றனர்."
மேற்கண்டவாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, தோல்விக்கு மேல் தோல்வி அடைந்துவரும் நிலையில், சச்சின் சரியாக சோபிக்க முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|