இந்திய கிரிக்கெட்டின் தாரகையான சச்சின் டெண்டுல்கர் கடந்த உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னரே ஓய்வு பெற்றிருந்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவான் இம்ரான்கான் கருத்துதெரிவித்திருந்தது அறிந்ததே.
இதே கருத்தை இன்னும் நிறைய முன்னாள் வீரர்கள் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக உலகக்கோப்பையின் முதல் இந்திய நாயகன் கபில்தேவ் சச்சின் தானாகவே ஓய்வுபெறுவதே நல்லது என்று கூறியிருந்தார்.
இப்போது மேலும் இரு முன்னாள் வீரர்கள் இதே கருத்தை வேறு வார்த்தைகளைல் கூறியுள்ளனர். சச்சின் குருவும் முன்னாள் அணித்தலைவருமான சுனில் கவாஸ்கர் இது குறித்து கூறுகையில்,
"எதிர்கால இந்திய அணியில் சச்சின் இடம் பெறமாட்டார் என்பது நிச்சயம். இதனால் சச்சினிடம் ஓய்வு பெறுமாறு, அணித் தேர்வாளர்கள் எடுத்து கூறலாம். சச்சினை தனியாக அழைத்து இது குறித்து பேச வேண்டும். அதன்மூலம் அவரே தனது ஓய்வை அறிவிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இது குறித்து சச்சினிடம் பேசுவதற்கு ஸ்ரீகாந்த் தான் தகுந்த நபர் என்று கருதுகின்றேன். ஏனெனில் சச்சின் இந்திய அணியில் அறிமுகமான போது, ஸ்ரீகாந்த் தான் கேப்டனாக இருந்தார். தற்போது அவர் அணித் தேர்வுக் குழுவின் தலைவராக உள்ளதால், சச்சினிடம் ஓய்வு குறித்து பேசலாம்" என்று கூறி உள்ளார்.
கங்குலி கூறுகையில்,
"ஒருநாள் தொடர்களில் சச்சின் வருவதும், போவதுமாக உள்ளார். இதனால் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களின் திறன் பாதிக்கப்படுகின்றது. ஒருநாள் போட்டிகளில் அவரால் தொடர்ந்து ஆட முடியுமா என்று கேட்க வேண்டும்.
அதற்கு அவரால் பதில் அளிக்க முடியாதபட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் அவராகவே ஓய்வு பெற்று கொள்ள வேண்டும். இது குறித்து சச்சினே சொந்தமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். சச்சினைப் போல இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிக பங்கு ஆற்றியவர் யாரும் இல்லை. எனவே அணியின் தேர்வாளர்களுக்கு கூட, சச்சினை ஓய்வுப் பெற கூற அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை" என்று வங்கப் புலி கங்குலி கருத்து கூறியுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed