10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி விடுமுறை!

312

சென்னை (16 ஜன 2022): கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல்9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.