மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

சென்னை (09 ஜூன் 2020): எதிர் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் 11 வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா? அல்லது தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிப்பதா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

எனவே, பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வருகின்ற 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், 11-ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

எனவே, இந்தத் தேர்வுகள் ரத்துச் செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும்.

12-ம் வகுப்பு தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக் கேற்ப 12-ம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.