விழுப்புரம் தலித் குடும்பம் மீதான தாக்குதலுக்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம்!

பிப்ரவரி 27, 2018 664

சென்னை(27 பிப் 2018): சென்னை தலித் குடும்பம் மீதான தாக்குதலுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில் நிலப்பிரச்சனையின் காரணமாக, தலித் குடும்பத்தை சேர்ந்த ஆராயி என்ற பெண்மணி மற்றும் அவரது 14 வயது மகள் சமூக விரோதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதோடு, அவருடைய 8 வயது மகன் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொடூர சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் சமீப காலமாக தலித்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி 01 அன்று வசந்த கிருஷ்ணாபுரம் தலித் காலனி அருகே மூன்று தலித் இளைஞர்கள் பிணம் கண்டுடெடுக்கப்பட்டன. இவர்களில் ஒரு இளைஞன், வேறு ஒரு உயர் ஜாதி பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதனையொட்டி இந்த கொலைகள் சம்பவம் நடந்துள்ளதா? என்று ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து அவ்வூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலித் காலனிக்குள் உயர் ஜாதி கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் நுழைந்து 22 தலித் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கே ஒரு நாய்க்குட்டி ஒன்றை இரண்டு துண்டாக வெட்டிக்கொன்று, சுவற்றில் தொங்கவிட்டு, அதன் ரத்தத்தால் சுவற்றில், ‘இது தலித்களுக்கு இது ஒரு எச்சரிக்கை’ என்று எழுதிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தான் வேலாம்புதூரில் நிலப்பிரச்சினை காரணமாக இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க சமூக விரோதிகள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி வருகையின் புதுச்சேரி வருகையால் ஏற்பட்ட வேலைப்பளுவை காரணம் காட்டி, துவக்கத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து மெத்தனம் காட்டிய காவல்துறையின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேசிய அளவில் தலித் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள், தலித்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது. தமிழ் நாட்டிலும் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது கவலையளிக்கிறது. இதனை அரசு இருப்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நாகரீகமான சமூகத்தில் இதுபோன்ற ஆணவப் போக்கை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...