ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்!

மார்ச் 01, 2018

சென்னை(01 மார்ச் 2018): சிரியாவில் நடைபெற்று வரும் மனித படுகொலைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி,ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடிதம் அனுப்பி உள்ளது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,துணைத்தலைவர் முஹம்மது முனீர்,பொதுச்செயலாளர் முஹம்மது சிந்திக்,துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி ஆகியோர், பெசன்ட் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் - UNHCR கமிஷ்னர் சச்சுதானந்த வளவனை சந்தித்து கடிதத்தை அளித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் எழுதியுள்ள கடிதத்தில்:

"அன்பிற்கினிய ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்புமிகு பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸ் அவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

"" உலகின் நரகமே சிரியாவின் குனேட்ரா நகரமும்தான்'' என்று தாங்கள் மேற்கோள் காட்டியதே சிரியாவின் வேதனைகளை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.சிரியாவில் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருவதும்,குழந்தைகள் கொத்து கொத்தாக அழிக்கப்பட்டு வருவதும், தொடர் வேதனையாக 8 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே உள்ளது.ஐக்கிய நாடுகள் சபை இதில் முழுமையான கவனம் செலுத்தி அமைதி ஏற்படுத்தவில்லை என்பதே உலக மக்களின் கவலை.

தாங்கள் உடனடியாக சிரியா பிரச்சனையில் தலையிட்டு நிரந்தர அமைதி ஏற்படுத்த வேண்டும்.முத்தரப்புகளையும் ஒன்றிணைத்து அமைதி பேச்சுவார்தையை துரிதபடுத்த வேண்டும்.ரஷ்யாவின் சுகாய் விமானங்கள் மூலம் நடத்தபடும் வான் வழி தாக்குதல்களும், அதிநவீன கொடூர ஆயுதங்களை கொண்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்.

உள்நாட்டு போர் என்று ஐ.நா சபை அமைதியாக இருந்து விடாமல் மக்கள் நிம்மதியுடன் வாழ உரிய வழிவகை செய்யப்பட வேண்டும்.போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ வசதி,இருப்பிட வசதி,சுகாதாரம்,உணவு ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் சபையே முன் நின்று ஏற்படுத்த வேண்டும்.ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தி உரிய மக்கள் பிரதிநிகளை கொண்ட அரசை ஏற்படுத்த ஐ.நா. சபை முன் வர வேண்டும்.

சிரியா அகதிகள் அனைவருக்கும் உரிய வாழ்வியல் பாதுகாப்பை உலக நாடுகள் ஏற்படுத்த வேண்டும்.இதுவே உலகில் அமைதியை விரும்பும் மக்களின் பேராவலாக உள்ளது.தாங்கள் இதனை வழிநடத்தி அமைதியை ஏற்படுத்துமாறு இந்திய மக்களின் சார்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது." இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Search!