ரஷ்ய அதிபருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை!

மார்ச் 06, 2018

சென்னை (06 மார்ச் 2018): சிரியா நடைபெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தக்கோரி ரஷ்ய அதிபருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள ரஷ்ய துணை தூதரக அலுவலகத்தில் தூதரக அதிகாரி டெமிட்ரி பி.அனானிவ்(Dmitry B.Ananiev)வை,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,துணைத் தலைவர் முஹம்மது முனீர்,துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி ஆகியோர் சந்தித்து ரஷ்ய அதிபருக்கான கடிதத்தை அளித்தனர்.

கடிதத்தை பெற்றுக்கொண்ட தூதரக அதிகாரி ஜமாஅத் நிர்வாகிகளுடன் நீண்டநேரம் விவாதித்தார்.அவர் கூறுகையில்: ரஷ்யா மீது திட்டமிட்டு தவறாக பரப்பப்படுகிறது;சிரியா அரசுக்கு ரஷ்யா உதவி செய்வதன் அடிப்படை நோக்கமே ISIS மற்றும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதுதான்;அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது எங்களது நோக்கமல்ல என்று விவரித்தார்.

அதற்கு பதிலளித்த ஜமாஅத் நிர்வாகிகள்-: தங்களின் நோக்கம் சரியானதாக இருக்கலாம்;ஆனால் தாக்குதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்பதை ரஷ்ய அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறி சிரியாவில் பாதிக்கப்ட்டுள்ள மக்களின் வீடியோக்களை காண்பித்தனர்.

வீடியோ பார்வையிட்ட தூதரக அதிகாரி -: இவை எல்லாம் எங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது;ரஷ்யா மீது நீங்கள் தவறான எண்ணம் கொள்ளாதீர்கள்;ரஷ்ய அரசு சார்பில் உள்ள நியாயங்களையும்,தவறான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய தூதரக அதிகாரிகளும்,இஸ்லாமிய அமைப்புகளும் அமர்ந்து பேசுவோம்;அதற்கான ஒருங்கிணைப்பை நீங்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்;உங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டோம்;எங்கள் அதிபருக்கு உடனடியாக உங்கள் கடிதத்தை அனுப்பி வைக்கிறோம்; என தெரிவித்தார்.

ரஷ்ய அதிபருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் எழுதியுள்ள கடிதத்தில்:

"மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு,

ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் தங்கள் மீது உண்டாவதாக...

ரஷ்யாவின் மீது எப்பொழுதும் பாசமும் நட்பும் எங்களுக்கு அதிகம் உண்டு.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் திரள்மிக்க சமூக சேவை மற்றும் மனித உரிமைகள் அமைப்பு.சுனாமி உள்ளிட்ட பேரிடர்களின்போது எங்களின் சேவைகள் மிக சிறப்பானதாக இருக்கும்.தற்போது சிரியாவில் நடக்கும் இன அழிப்பு என்பது உலகின் மாபெரும் துயரமாக உள்ளது.

ஜ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸ் (Antonio Guterres) "சிரியாவின் கவுட்டா நகரம் பூமியின் நரகம்' என்று வர்ணித்திருப்பது தற்போது உள்ள சிரியாவின் அவல நிலையை காட்டுகின்றது.பஷார் அல் ஆஸாத்தின் படைகள் இதுவரை கடந்த ஒரு வாரத்தில் 800க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றிருப்பது வேதனையின் உச்சமாக உள்ளது.

சிறு குழந்தைகள்,பால் குடிக்கும் குழந்தைகள்,பெண்கள்,முதியோர்கள் என பொது மக்கள் அழிக்கப்பட்டு வருவது இதுவரை இல்லாத இரத்தச் சுவடுகளாக உள்ளன.உணவு, தண்ணீர்,மருத்துவ வசதிகள்,வீடுகள் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் மரணித்து வருகின்றனர்.ரஷ்யா அளித்த சுகாய் போர் விமானங்கள் மூலமே இந்த இன அழிப்பு நடந்துள்ளது.

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே!

ரஷ்யா வழங்கி வரும் இராணுவ உதவியின் மூலம்தான் இத்துனை பெரிய இன அழிப்பும் 8 வருட கால போரும் நடந்து வருகின்றது.

ஆஸாத்திற்கு வழங்கி வரும் அனைத்துவிதமான இராணுவ உதவிகளையும் ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்.சிரியாவின் அமைதிக்கான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஐ.நா.வில் ரஷ்யாவே முன்னெடுக்க வேண்டும்.முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஐ.நா.வின் உதவியுடன் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ வசதி,இருப்பிட வசதி, சுகாதாரம்,உணவு ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து ரஷ்யாவே முன்னெடுக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!