ரஜினிக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி!

மார்ச் 09, 2018 629

சென்னை (09 மார்ச் 2018): தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.ஆட்சிதான் நடக்கிறது என்று நடிகர் ரஜினி காந்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் மகளிர் அணி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா உருவப்படத்தைத் திறந்துவைத்து மரியாதைசெலுத்தினர். கேக் வெட்டினர். அதன்பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

''பெரியார் தமிழகத்துக்குக் கிடைத்த பொக்கிஷம். அவருடைய சிலையை அகற்றுவோம்; சேதப்படுத்துவோம் என்பது கண்டனத்துகுரியது. தலைவர்கள் சிலைகளுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க உத்தரவு போடப்பட்டுள்ளது. தலைவர்களின் சிலையை யார் அவமதித்தாலும் அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் நடப்பது எம்.ஜி.ஆர் ஆட்சிதான். இங்கு வேறு ஆட்சியா நடக்கிறது? எம்.ஜி. ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா வழிநடத்தினார். இரண்டு தலைவர்களும் மக்களுக்காகப் பணியாற்றி மறைந்தார்கள். அவர்களுடைய கட்சிதான் அ.தி.மு.க. எனவே, ரஜினி சொன்னதுபோல தமிழகத்தில் வெற்றிடம் என்பதற்கு இடம் இல்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நான் பொறுப்பேற்று ஒராண்டு ஆட்சியை நிறைவுசெய்துவிட்டேன். எந்தத் தொய்வும் இல்லாமல் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அவர்கள் எப்படி ஆட்சி செய்தார்களோ... அதே வழியைப் பின்பற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்குத் தந்துகொண்டிருக்கிறோம். எனவே, வெற்றிடம் என்பது இல்லை. ரஜினி கண்களுக்கு எப்படித் தெரிகிறது என்று தெரியவில்லை'' என்று பதில் அளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...