காவிரி நீர் விவகாரம் குறித்து எடப்பாடி அரசு அறிக்கை!

March 11, 2018

சென்னை (11 மார்ச் 2018): காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த இறுதி ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் சிவில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. தமிழ்நாடு அரசும் ஒரு சில பாதகமான அம்சங்களை நீக்கக்கோரி சிவில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16.2.2018 அன்று தீர்ப்பு வழங்கியது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு ஆறு வார காலத்திற்குள் அமைக்கவேண்டும் என்றும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்படமாட்டாது என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் 22.2.2018 அன்று நடத்தப்பட்டது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, இந்த வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை ஆறு வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 24.2.2018 அன்று சென்னைக்கு வந்திருந்த பிரதமரிடம், இந்த 2 அமைப்புகளையும் உரிய காலத்திற்குள் அமைத்துத் தரவேண்டும் என்று முதல்-அமைச்சர் நேரில் கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, 25.2.2018 அன்று சென்னைக்கு வந்திருந்த மத்திய நீர்வள ஆதாரத்துறை மந்திரியிடமும் அதை வலியுறுத்தி நேரில் கடிதம் அளிக்கப்பட்டது.

மேலும், பிரதமரை, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் தலைமையில் நேரில் சந்தித்து அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த நேரம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை செயல்படுத்துவது குறித்து டெல்லியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் நீர்வள ஆதாரத்துறை செயலாளர்கள் ஆகியோர் 9-ந் தேதியன்று நடக்கும் கூட்டதில் கலந்து கொண்டு தங்கள் மாநிலங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென்று மத்திய நீர்வள ஆதாரத் துறை செயலாளர், கடந்த 5-ந் தேதி கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட வேண்டிய நிலை குறித்து விவாதிக்க, முதல்- அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த 7-ந் தேதியன்று கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அதில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை, ஆறு வார காலக்கெடுவுக்குள் மத்திய அரசு அமைப்பதற்கு வலியுறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் ஆணைகளை செயல்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டுள்ள அந்தத் திட்டம் என்ன என்பது, 1956-ம் ஆண்டு பன்மாநில நதிநீர் தாவா சட்டம் பிரிவு 6(ஏ)(2)-ல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திட்டம் என்பது என்னவென்றால், நடுவர் மன்ற இறுதி ஆணையையும், தற்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையும் செயல்படுத்த ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள், அதிகார வரம்புகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 16.2.2018 தேதி தீர்ப்பின் 397-ம் பத்தியில், நீர்ப் பங்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதைத் தவிர, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர இனங்களில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, பத்தி 399-ல், காவிரி நடுவர் மன்றம், நீர் முறைப்படுத்தும் குழு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் உதவியோடு, நீர் விடுவிப்பதை மாதாந்திர வாரியாக கண்காணிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள திட்டம் என்பது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுதான் என்றும், அதிகார வரம்புகளுடன் இந்த அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்று ஆணை தெளிவாக உள்ள நிலையில், நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை என்று தமிழ்நாடு அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

அதன்படி, ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று டெல்லியில் 9-ந் தேதி நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். காவிரி நதிநீர் பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட தமிழக விவசாயிகளின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!