திருமணமான மூன்றே மாதத்தில் உயிரிழந்த ரிஸ்வான் பாஷா!

மார்ச் 11, 2018 1457

கோவை (11 மார்ச் 2018): கோவை சிறையில் உயிரிழந்த ரிஸ்வான் பாஷாவின் மனைவி, திருமணம் ஆன மூன்றே மாதத்தில் விதவைக் கோலம் பூண்டுள்ளது அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பழனிபாபா என்பவர் கடந்த 1997-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைத் தொடந்து, கோவையில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் கிருஷ்ணசாமி என்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் கைதான ரிஸ்வான் பாஷா என்பவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் ரிஸ்வான் பாஷாவுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் சட்டத்தில் அவருக்கு எந்த உதவியும் இனிறி சுமார் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

இந்நிலையில் முதல்முறையாக கடந்த நவம்பர் மாதம் 28 நாள்கள் பரோலில் வெளிவந்தார். அப்போதுதான், சமீரா பானு என்றப் பெண்ணை ரிஸ்வான் திருமணம் செய்தார்.

ரிஸ்வான் பாஷாவுக்கு சிறையில் பலமுறை வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப் படவில்லை என தெரிகிறது. இதனிடையே நேற்று இரவு அவருக்கு மீண்டும் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது . இதையடுத்து, சிறைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்நிலையில், ரிஸ்வான் இன்று காலை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரிஸ்வான் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். சிறை மருத்துவமனையில், நேற்றிரவு போதுமான சிகிச்சை அளிக்காததால்தான் ரிஸ்வான் இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் ரிஸ்வான் உயிரிழந்துள்ள நிலையில், அவரது புது மணப் பெண்ணான அவரது மனைவி சமீரா பானு விதவை கோலம் பூண்டுள்ளது காண்போரைக் கண்ணீர் விட வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...