தேனி பரபரப்பு: காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

மார்ச் 12, 2018 595

தேனி (12 மார்ச் 2018): தேனி காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளன.

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்ளில் இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை. 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் துர்திர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், போலீஸார், தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டும் 9 பேரை காப்பாற்ற முடியவில்லை.

தீ விபத்தை பார்த்து பதற்றப்பட்டு ஓடியதால், 9 பேர் பள்ளத்தில் விழுந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் இந்திய விமானப்படையின் ஹெலிக்காப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி, இரு அணிகளாக மொத்தம் 39 பேர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். இரண்டு பிரிவுகளாகச் சென்ற அவர்களில் சென்னையிலிருந்து 27 பேரும், ஈரோட்டிலிருந்து 12 பேரும், சென்றுள்ளனர்.

இவர்களில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய் அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மூவரும் நள்ளிரவு 3 மணி வரை குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...