பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!

மார்ச் 14, 2018 751

சென்னை (14 மார்ச் 2018): பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியதாகவும், இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில் அரசுக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய தாகவும் குற்றம் சாட்டப்பட்டது

இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் குறித்து விசாரணை செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டது. அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு வழக்கு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ 14-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கர் முன்பு நடந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதன் பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை சிபிஐ நீதிமன்றம் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. முகாந்திரம் இல்லாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...