தமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து எம்.எல்.ஏ அபூபக்கர் எதிர்ப்பு!

மார்ச் 16, 2018 638

சென்னை( 16 மார்ச் 2018): காவிரி நதிநீர் பிரச்சினை, வக்ஃப் வாரிய தேர்தல், சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சட்டசபைக்கு வந்தார்.

சட்ட சபை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழக சட்ட சபையில் வியாழக்கிழமை நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியோர் புறக்கணிப்பு செய்துள்ளோம். இதற்கு காரணம் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பாஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்றன.

அக்கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என முடிவு செய்யப் பட்டது. அதற்கான எந்த தீர்வையும் தமிழக அரசால் காண முடியவில்லை. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் கண்துடைப்புதான்.

குறிப்பாக சிறுபான்மையினர் முஸ்லிம்களின் பள்ளிவாசல், தர்காக்கள், கபருஸ்தான் நிர்வகிக்கும் வக்ஃப் வாரியம் அதன் தலைவர் பதவி விலகி இரண்டு வருடம், மூன்று மாதம் ஆகிறது. அதற்கான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. உறுப்பினர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உடனடியாக தலைவர் தேர்தல் நடத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறைச்சாலைகளில் 15, 20 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினோம். திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருணை அடிப்படையில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார். தொடர்ந்து இது சம்மந்தமாக முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் இதுகுறித்து உறுதியளித்தனர். சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரும் மீண்டும் சிறைவாசிகள் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். ஆனால் தமிழக அரசு இதுவரை யாரையும் விடுதலை செய்ய வில்லை. சில தினங்களுக்கு முன்பு சிறையில் ரிஸ்வான் பாஷா என்ற கைதி இறந்திருக்கிறார். ஏற்கனவே ஐந்துக்கு மேற் பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.

இந்த அரசு நிதிநிலை அறிக்கைகளில் தெரிவிக்கும் பெரும்பலான அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக தான் இருக்கிறது. இவ்வறிவிப்புகள் மக்களுக்கு சென்றடைவதில்லை. காவிரி நதிதீர் பிரச்சினையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமலும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்வில்லை. பா.ஜ.கவின் பினாமி அரசாகத்தான் தமிழக அரசு செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி கண்டிக்கக்கூடிய வகையில் நாங்கள் நிதிநிலை அறிக்கையை புறக்கணித்திருக்கிறோம்."
இவ்வாறு கேஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...