ரத யாத்திரையை தடுத்த வேண்டும் - எம்.எல்.ஏ அபூபக்கர் வலியுறுத்தல்!

மார்ச் 18, 2018 548

சென்னை (18 மார்ச் 2018): இந்திய திருநாடு சமய சார்பற்ற ஜனநாயக நாடாகும் விஸ்வ இந்து பரீஷத் ரதயாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும் சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தமிழக முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய திருநாடு சமய சார்பற்ற ஜனநாயக நாடாகும். நம் நாட்டில் அனைத்து சமுதாய மக்களும் சமய நல்லிணக்கத்தோடு அண்ணன்-தம்பி, மாமன்- மச்சான் உறவு பாராட்டி சகோதரத்துவத்துடன் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றோம். சமய நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அவ்வப்போது சிலர் செயல்படுவது நமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்தியாவில் ராமராஜ்ஜியம் உருவாக்குவோம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்ற முழக்கத்தோடு விஸ்வ இந்து பரீஷத் எதிர்வரும் 20.03.2018 அன்று ரதயாத்திரை கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு எனது கடையநல்லூர் தொகுதி புளியரை வழியாக வருவதாக அறிவித்துள்ளனர். இவ்வறிவிப்பு வந்த உடனேயே திருநெல்வேலி மாவட்டத்தில் பதற்றம் உருவாக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் இந்த ரதயாத்திரை தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரதயாத்திரை தமிழக எல்லையில் நுழையுமானால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் சென்று ரதயாத்திரை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் முடிவு செய்துள்ளனர். இதே கோரிக்கை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதோடு, ரதயாத்திரை தடுத்து நிறுத்தும் போராட்டத்திலும் பங்கேற்பதென முடிவு செய்திருக்கின்றனர்.

முன்பு இதுபோன்ற ரதயாத்திரை நடத்தப்பட்டு இந்திய திருநாட்டில் மதக்கலவரங்கள் உருவாகி பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் சந்தித்து ரதயாத்திரை-ரத்த யாத்திரையாக மாற்றப்பட்ட கொடூர சம்பவம் நம் நெஞ்சங்களிலிருந்து இன்னும் மறையாமல் கரைபடிந்த வரலாறாகவே இருந்து வருகிறது.இந்த ரதயாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாக தெரிவிப்பது சரியான காரணமாக இருக்க முடியாது. அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை, சமய நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பது தமிழக அரசின் கடமையாகும். எனவே இந்த ரதயாத்திரையை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டுமென மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இது சம்மந்தமாக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இப்பிரச்சினை குறித்து பேச இருக்கின்றேன்.இக்கடித நகல் தமிழ்நாடு அரசு துணை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு அரசின் வக்ஃப் வாரிய அமைச்சர் தகவல் அனுப்பி ரதயாத்திரையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியுள்ளார்.இப்பிரச்சினை சம்மந்தமாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரிலும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கொண்டுவர உள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...