பத்மஸ்ரீ விருது பெறும் 11 ஆம் வகுப்பு தமிழ் மாணவர் பசூல் ரஹ்மான்!

மார்ச் 20, 2018 1292

சென்னை (20 மார்ச் 2018): சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கிய 11 ஆம் வகுப்பு மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஜே.சி.கே நகரில் வசிக்கும் சிராஜுதீன், நசீமுன்னிஷா இவர்களின் மகன் பசூல்ரஹ்மான்(16). இவர் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த பசூல்ரஹ்மான், சிறுவயதிலிருந்தே ஏழை மற்றும் ஆதரவற்ற நிலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவ பல கோணங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் பசூல்ரஹ்மான். இந்தியாவில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் மாதத்திற்கு ஒரு ரூபாய் வீதம் சேமிப்பு செய்து அந்த தொகையை மத்திய அரசு மூலமாக சேமிக்கப்பட்டு, அதன் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி பயில உதவவேண்டும், இதற்கான புதிய சட்டத்தினையும் பரிசீலனை செய்து மத்திய அரசு அமுல்படுத்திட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இத்திட்டத்திற்கு "டாக்டர் அப்துல்கலாம் ஏழை மாணவர்கள் இலவச கல்வி சேமிப்பு திட்டம்" என பெயரும் சூட்டியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் அளித்த மத்திய அரசு, இதுபோன்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த நினைக்கும் மாணவன் பசூல்ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் எனவும் பிரதமரை சந்திக்க வருமாறும் கடந்த வருடம் பசூல்ரஹ்மானுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அதன்படி, பிரதமரைச் சந்தித்து இந்த திட்டத்தை பற்றி 16 நிமிடங்கள் உரையாடினார் பசூல்ரஹ்மான். மேலும் கடந்த 61வது குடியரசு தினவிழா உரையில் பிரதமர் மோடி விளக்கி உரையாற்றியது செங்கல்பட்டு மாணவர் பசூல்ரஹ்மான் ஏழை மாணவர்களுக்காக வகுத்த புதிய திட்டத்தை பற்றியே.

பின்னர் மாணவர்களுக்கான பயனுள்ள இதுபோன்ற திட்டத்தை வகுத்தமைக்கு வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது. பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன், நிதித்துறை அமைச்சர் அருன்ஜேட்லி, குடியசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், துணை ஆளுநர் வெங்கையாநாயுடு உள்ளிட்டோரும் பசூல்ரஹ்மானை சந்தித்து இத்திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்திருந்தனர். தமிழக அரசு சார்பிலும் இவருக்கு வாழ்த்துக்களையும் ஆதரவும் தெரிவித்திருந்தது. மேலும் செங்கல்பட்டு மாணவன் இயற்றிய இந்த திட்டமானது முழு பரிசீலனைக்குப்பிறகு கடந்த ஜனவரி மாதம் லோக்சபாவில் டாக்டர் அப்துல்கலாம் ஏழை மாணவர்கள் இலவச கல்வி சேமிப்பு திட்டம் என சட்டமும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

Mohamed Sardhar 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...