பாஜக தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மர்ம நபர்களுக்கு வலை வீச்சு!

மார்ச் 21, 2018 552

கோவை (21 மார்ச் 2018): கோவை பாஜக தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் சி.ஆர். நந்தகுமார் (48). இவரது வீடு கோவை சிங்காநல்லூர் மசக்காளி பாளையம் ரோடு பாலன் நகரில் அமைந்துள்ளது.

இவர் தனது இனோவா காரை வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தி இருந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை நந்தகுமார் வீடு மீது வீசினர். இதில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது கார் குபுகுபுவென தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டதும் நந்தகுமார் எழுந்து வெளியே வந்தார். இதனை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கும், பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணிநேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.

சம்பவ இடத்திற்கு கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, துணை கமி‌ஷனர் லட்சுமி, உதவி கமி‌ஷனர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். நந்தகுமார் வீட்டில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் ஹெல்மெட் அணிந்த படி வரும் காட்சி பதிவாகி உள்ளது. அவர்களில் ஒருவர் நந்தகுமார் வீட்டின் சற்று தூரத்தில் நிற்பதும் மற்ற 2 பேர் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த 7 ஆம் தேதி கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் கடந்த 7-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அலுவலகத்தின் சுவரில் பட்டு பெட்ரோல் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன், ஜீவா, அவரது நண்பர் கவுதம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரத்திற்காக பாஜக நிர்வாகிகளே தங்கள் வீட்டின் மீது குண்டுகளை வீசிக் கொள்வதும், பின்பு காவல்துறையின் விசாரணையில் மாட்டிக் கொள்வதும் வழக்கமாகி விட்ட சூழலில், காவல்துறை பாஜக தலைவர் நந்தகுமார் மீதும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...