சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.5 கோடி கல்வி உதவித்தொகை!

மார்ச் 21, 2018 526

தூத்துக்குடி (21 மார்ச் 2018): தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.5 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டு உள்ளது. இங்கு திரளான சிறுபான்மையினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நடந்து முடிந்த கல்வியாண்டில் ரூ.40 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. 1991-க்கு பிறகு சிறுபான்மையினரால் தொடங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியம் வேண்டும், மதத்தின் அடிப்படையில் இல்லாமல் சாதியின் அடிப்படையில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கைகளை ஏற்று அதனை வழங்க பரிந்துரைத்து உள்ளனர்.

இதற்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை சுமார் ரூ.5 கோடிக்கும் அதிகம் வழங்கப்பட்டு உள்ளது. எதிர்வரும் கல்வியாண்டில் அதிக அளவில் வழங்கப்படும். கடந்த ஆண்டில் கல்வி, தனிநபர் கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.34 லட்சத்து 70 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அதிகமாக உயர்த்தி வழங்கப்படும்.

சிறுபான்மையினர்களிடம் நலத்திட்டம் குறிது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இஸ்லாமிய மாணவிகளுக்காக 6 விடுதிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு சிறு பான்மையினர் ஆணைய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆ.ஜுபிளி மனோகரன் வரவேற்று பேசினார். ஆணைய உறுப்பினர்கள் பஷீர், மவுரியா மெத்தபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்களிடம் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பன்னீர்வேலு, உதவி ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், மாவட்ட நுகர்வோர் மற்றும் வழங்கல் அலுவலர் பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...