கை இருக்காது - தமிழிசை சவுந்திர ராஜன் எச்சரிக்கை!

மார்ச் 24, 2018 765

கோவை (24 மார்ச் 2018): இனி எதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீதும் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டிலும் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை, “நம் மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. கடந்த 7-ம் தேதி, பா.ஜ.க-வின் மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய உண்மையான குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்யவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்களுக்கு குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தன போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். முதல் சம்பவம் நடந்தபோதே குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்திருக்காது. இதற்கு மேலும், போலீஸார் காலம் தாழ்த்தினால் அடுத்தக்கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

இரவு நேரத்தில் எங்கள் அலுவலகத்திலும், மாவட்ட தலைவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசிய கோழைகள் யாராக இருந்தாலும் இப்போது நேரில் வாருங்கள்... யார் எரிகின்றார்கள் என்று பார்க்கலாம். எத்தனை குண்டுகள் வெடித்தாலும் பா.ஜ.க தொண்டனை ஒன்றும் செய்ய முடியாது. இது கருப்பு மண் அல்ல காவி மண்.

சி.ஆர்.பி.எப் வீரர் போதையில் பெரியார் சிலையுடன் சண்டை போட்டதற்கு பா.ஜ.க-வினர் எப்படி பொறுப்பாக முடியும்? தி.மு.க-விற்கே தலைவராக முடியாத ஸ்டாலினால் தமிழகத்திற்கு முதல்வராக முடியுமா? செயல் தலைவரைப்போல, செயல் முதல்வர் என்று ஒரு பதவி உருவாக்கினால் ஸ்டாலின் செயல் முதல்வராக வரலாம்.

ஸ்டாலின் வைகோவுடன் கூட்டணியில் இருக்கும் வரை எங்களுக்கு வெற்றிதான். ராம ரதத்திற்கு உள்ள வரவேற்பை போல பா.ஜ.க-விற்கும் வரவேற்பு இருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பா.ஜ.க தயார்.

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத திரிபுராவில் கடுமையான உழைப்பால் வெற்றி பெற்றோம். அதேபோல தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம். இதனால்தான் ஸ்டாலின் எங்களை கண்டு பயப்படுகிறார். தமிழகத்திலும் ராமராஜ்ஜியம் நிச்சயம் வரும். தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோனோர் இந்துக்கள். நாங்கள் எந்த தெருவிலும் விநாயகர் சிலையைக் கொண்டுபோவோம். அதை அரசாலும் காவல்துறையாலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கமால் விடமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இரத்தம் கொடுப்பவர்கள். இரத்ததை எடுப்பவர்கள் இல்லை. தமிழகத்தில் பாவிகள் ஆளும் போது, காவிகள் ஆளக்கூடாதா? இதுவே பா.ஜ.க-வினர் மீது கடைசி தாக்குதலாகக் இருக்கட்டும். பா.ஜ.க-வினர் மீது இனி யாரும் கைவைக்ககூடாது.. அப்படி கை வைத்தால் கை இருக்காது" என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...