இளம் பெண் புகாரை அடுத்து அன்வர் ராஜா எம்.பி மகன் திருமணம் நிறுத்தம்!

மார்ச் 25, 2018 851

சென்னை (25 மார்ச் 2018): தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, அதிமுக எம்.பி அன்வர் ராஜா மகன் மீது இளம் பெண் போலீசில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் ராம்நகரைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா. இவர் ஒரு ரேடியோ ஜாக்கி ஆவார்.

இவர், சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில்," நான் சென்னை வானொலியில் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறேன். 2015-ம் ஆண்டு சிறந்த தொழில் முனைவோராகத் தேர்வு செய்யப்பட்டு எனக்கு பரிசு வழங்கப்பட்டது. அந்த விழாவில் அன்வர்ராஜா எம்.பி-யின் மகன் நாசர்அலி எனக்கு அறிமுகமானார்.

சைதாப்பேட்டையில் உள்ள என்னுடைய அலுவலகத்துக்கு நாசர் அலி அடிக்கடி வருவார். என்னிடம் அவர் அன்பாகப் பேசினார். ஏற்கெனவே ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றி தான் திருமணம் செய்துகொண்டதாக என்னிடம் தெரிவித்தார். திருமண வாழ்க்கைக்குப் பிறகு மன நிம்மதியில்லை என்றும் என்னிடம் கூறினார். எனக்கும் திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் தனிமையில் வாழ்வதாக அப்போது அவரிடம் கூறினேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.

அதனால் நானும் இஸ்லாம் மதத்திற்கு மாறினேன். மேலும் அவருடைய தேவைக்காக பணமும் கொடுத்தேன். ஆனால் கடந்த ஆறுமாதங்களாக நாசர்அலியின் நடவடிக்கைகள் மாறின. இப்போது அவர் என்னைத் திருமணம் செய்ய மறுக்கிறார். அவருடைய தந்தை அன்வர் ராஜாவும் இதற்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

அவருக்கு மார்ச் 25 ஆம் தேதி வேறு ஒருவருடன் திருமணம் செய்ய இருப்பதாக கேள்விப் பட்டேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதற்கிடையே நாசர் அலிக்கு திருமணம் செய்து வைக்க இருந்த ஜமாத்திடமும் ரொபினா புகார் அளித்ததால் இப்பிரச்னைக்கு  ஒரு முடிவு வரும் வரை நிக்காஹ் செய்ய இயலாது என ஜமாத் மறுத்துவிட்டது. ஆனால் ரொபினாவின் குற்றச் சாட்டுகளை அன்வர் ராஜா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...