பழநி கோவில் சிலை செய்ததில் முறைகேடு - இருவர் கைது!

மார்ச் 26, 2018 563

பழநி (26 மார்ச் 2018): பழநி கோவிலில் சிலை செய்ததில் தங்கம் முறைகேடு செய்ததாக இரண்டு பேரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பழநி முருகன் கோயிலுக்கு 2004ம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய பஞ்சலோக சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டது. சிலையை கோயிலிலேயே செய்ய வேண்டும் என்ற ஆகம விதியையும் மீறி கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டது.

இந்த சிலை செய்ததில் சேதாரமான கையாடல் செய்யப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது. மேலும் புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை 6 மாதங்களிலேயே கருத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல் 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆய்வு நடத்தினார்.

அந்த சிலையை மீட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர், ஐஐடி தொழில்நுட்ப நிபுணர் குழுவிடம் அளித்து அதனைப் பரிசோதித்தனர். அதில் கிட்டத்தட்ட 10 சதவீதம் தங்கம் இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த கணக்கின் படி முன்பே திருத்தணி கோயிலில் இருந்து பெறப்பட்ட 10 கிலோவுக்கு பதில் கூடுதலாக 12 கிலோ என மொத்தம் 22 கிலோ தங்கம் அச்சிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த சிலை ஐம்பொன்னால் செய்யவில்லை.

இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து, தங்கம் கையாடல் செய்ததாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், தலைமை ஸ்தபதி முத்தையா மற்றும் பழநி கோயில் நிர்வாகி கேகே ராஜா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

ஸ்தபதி முத்தையா மீது ஏற்கனவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...