குருக்களை கட்டிப் போட்டு மனைவி படுகொலை - சென்னையில் பயங்கரம்!

ஏப்ரல் 05, 2018 765

சென்னை (05 ஏப் 2018): சென்னை வடபழனியில் குருக்களை கட்டிப் போட்டு விட்டு மனைவி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு. சிவன் கோவில் குருக்களான இவர் மனைவி பிரியாவுடன் (24) வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இன்று காலை 6.15 மணி அளவில் பிரபு வீட்டுக்கு வெளியில் உள்ள கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கிடந்தார். இதனை பார்த்து வீட்டு உரிமையாளர் விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அப்போது கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை தள்ளிக் கொண்டு பிரியா, பிரியா என அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரியா வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இதபற்றிய தகவல் பரவியதும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வடபழனி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உதவி கமி‌ஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் சந்த்ரு ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இணை ஆணையர் மகேஸ்வரி, துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொலையுண்ட பிரியாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பிரபு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில் நகைக்காக கொள்ளையர்கள் இந்த படுகொலையை நடத்தியிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...